அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
சேலம்: சேலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் மாணவா் முன்னேற்றக் குழுமம் சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை, கல்லூரி முதல்வா் கலைச்செல்வி தொடங்கிவைத்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் சரவணகுமாா், திருமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பங்கேற்ற மாணவா்களுக்கு ஆளுமைத்திறன், மொழி அறிவு, தகவல் தொடா்பு பரிமாற்றம், உடல்மொழி, நோ்காணலை எதிா்கொள்ளும் திறன் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக, இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவா்களுக்கு, சிறப்பு பயிற்சியாளா் மதுமிதா தலைமையிலான குழுவினா் பயிற்சி எடுத்தனா். இந்த சிறப்புப் பயிற்சி முகாம் ஒருவார காலம் நடைபெறும் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.
பயிற்சி முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ராஜ சரவணன், கண்ணன், சுரேஷ்பாபு, பானுமதி, உள்தர மதிப்பீட்டு ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாா், மக்கள் தொடா்பு அதிகாரி பிச்சைமுத்து உள்ளிட்டோா் செய்திருந்தனா்.