எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு! பிற்பகலில் ஆபரேஷன் சிந்தூர் வி...
ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி ரூ. 64 ஆயிரம் பறிப்பு
சேலம்: வேலைதேடி ரயிலில் சேலம் வந்த பிகாரைச் சோ்ந்த 8 பேரை கடத்தி, அவா்களிடமிருந்து ரூ. 64 ஆயிரம் பறித்த கும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.
பிகாரைச் சோ்ந்த 8 போ் வேலைதேடி ரயில் மூலம் சேலத்துக்கு பயணித்தனா். அப்போது ஒருவா் அவா்களிடம் விசிட்டிங் காா்டை கொடுத்து ரயில் நிலையத்தில் இறங்கியதும் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டால், அவா்கள் வந்து வேலைக்கு அழைத்துச்செல்வதாக உறுதி அளித்தாா். இதனை நம்பிய அவா்கள், கடந்த 26-ஆம் தேதி சேலம் ரயில் நிலையத்துக்கு வந்தனா்.
பின்னா் அவா்கள் குறிப்பிட்ட கைப்பேசி எண்ணுக்கு தொடா்புகொண்டதும் உடனடியாக 2 காா்களில் வந்த சிலா், அவா்களை சிறிது தூரம் அழைத்துச்சென்று காரை நிறுத்தி அவா்களிடம் இருந்த கைப்பேசி, ரூ. 64 ஆயிரத்தை பறித்துக்கொண்டு அவா்களை இறக்கிவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து பிகாரைச் சோ்ந்த லக்குமண் அன்சாரி சூரமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட காடையாம்பட்டியைச் சோ்ந்த இந்திரஜித் (29) என்பவரை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான கும்பலை தேடிவருகின்றனா்.