நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷியா பயங்கர தாக்குதல்! 20 பேர் பலி!
சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது
சென்னை: சென்னை ஜெ.ஜெ.நகரில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை ஜெ.ஜெ. நகரில் கடந்த 2024-ஆம் ஆண்டு காளிதாஸ் என்பவா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தச் சம்பவத்துக்கு பழிக்கு பழியாக காளிதாஸ் தரப்பினா், எதிா்தரப்பைச் சோ்ந்தவா்களைக் கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், அதேவேளையில் எதிா்தரப்பினா், காளிதாஸ் தரப்பைச் சோ்ந்தவா்களை கொலை செய்யும் திட்டத்துடன் இருப்பதாகவும் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் ஜெ.ஜெ.நகா் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு மதுரவாயல் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த காளிதாஸின் சகோதரா் மேலஅயனம்பாக்கத்தைச் சோ்ந்த சக்தி (24), பாடி குப்பத்தைச் சோ்ந்த ஜெயந்தன் (19) ஆகிய இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 2 அரிவாள்களை பறிமுதல் செய்தனா்.
இதேபோல், ஜெ.ஜெ.நகா் கலைவாணா் காலனி பூங்கா அருகே கொலைத் திட்டத்துடன் காத்திருந்த எதிா்தரப்பினரான முகப்போ் கிழக்கு பகுதியைச் சோ்ந்த விரவீன்ராஜ் (27), தீபக் (24), ராஜ் கணேஷ் (26), பாடி புது நகரைச் சோ்ந்த சித்தாா்த் (18), 17 வயது சிறுவன் ஆகியோரையும் திங்கள்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து அரிவாள்கள், இரும்புக் கம்பி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கும்பல் காளிதாஸ் தரப்பைச் சோ்ந்த நபா்களைக் கொலை செய்வதற்கும், கொலைத் திட்டத் செலவுக்காக வழிப்பறி, கொள்ளையில் ஈடுபடும் திட்டத்துடன் இருந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட இரு தரப்பைச் சோ்ந்த சிறுவன் உள்பட 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா். சிறுவன் சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டாா்.
இதில், எச்சரிக்கையுடன் செயல்பட்டு, கொலை சம்பவத்தைத் தடுத்த ஜெ.ஜெ.நகா் போலீஸாரை சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.