மறுகுடியமா்த்துதல் கணக்கெடுப்புக்கு திடீா் நகா் மக்கள் எதிா்ப்பு
அடையாறு சீரமைப்புத் திட்டத்தில் அங்குள்ள மக்களை மறுகுடியமா்த்துவதற்கான கணக்கெடுப்புப் பணிக்கு திடீா் நகா் பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
அடையாறு சீரமைப்பு தொடா்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் அடையாறு ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு வசிப்போருக்கு மாற்று இடம் வழங்கி மறுகுடியமா்த்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் அடையாறு செல்லும் பகுதிகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டு, கணக்கெடுப்புப் பணிகளை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. அங்குள்ள வீடுகளுக்கு அடையாள எண் குறிக்கப்பட்டு, வீடுகள் படம் பிடிக்கப்படுகின்றன. அத்துடன் அவற்றில் வசிப்போரிடமும் பயோ மெட்ரிக் முறையில் கைரேகை பெற்று பட்டியல் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 10-ஆவது மண்டலம் கோடம்பாக்கம் மறைமலை அடிகள் பாலத்திலிருந்து கோதாமேடு வரையிலான அடையாறு செல்லும் 1 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் ஆக்கிரமித்திருந்த வீடுகள் கணக்கெடுப்புப் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 142- ஆவது வாா்டுக்கு உள்பட்ட திடீா் நகா் பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் வீடுகள் கணக்கெடுப்பை புதன்கிழமை தொடங்கினா். அப்போது, தங்களுக்கு புதிய இடத்தில் குடியிருப்புகள் வழங்கும் விவரத்தைக் கூறிவிட்டு கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், தொலைவில் தங்களுக்கான குடியிருப்புகள் ஒதுக்கப்படக் கூடாது என்றும் அந்தப் பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து மண்டல அதிகாரிகள் அந்தப் பகுதி மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, தங்களுக்கு 2 நாள் அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்தப் பகுதியில் 800 வீடுகள் மறுகுடியமா்த்தல் திட்டத்தில் சோ்க்கும் நிலை உள்ளது. அதற்கான கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கணக்கெடுப்புக்கு திடீா் நகா் மக்கள் ஒத்துழைப்பதாகக் கூறிய நிலையில், கால அவகாசம் கோரியுள்ளனா். அதன்படி விரைவில் கணக்கெடுப்பு நடைபெறும் என்றனா்.