`மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்' எம்.ஜி.ஆரை மோடியுடன் ஒப்பிட்ட அண்ணாமலை; பதிலளித்த ஜெயக்குமார்
இந்நிலையில் எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாகப் பேசியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் மோடியை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டிருந்தார். அதாவது, "டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து, தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும், பொதுமக்கள்மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள் தாங்கள் பட்ட துயரங்கள்.
வருங்கால சந்ததியினருக்கும் வரக்கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள். அமரர் எம்.ஜி.ஆர். அவர்கள் தமிழகத்தில் உள்ள சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார். நம் பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.
டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார் என்பது பெருமைக்குரியது" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து எம்.ஜி.ஆரை யாருடனும் ஒப்பிட முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டமாக பேசியிருக்கிறார்.
செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசிய ஜெயக்குமார், "எல்லோரும் சமம் என்றார் எம்ஜிஆர். மதத்தால் பிரிவினை செய்கிறது பாஜக. ஒரு கண்ணில் வெண்ணெய்யும் மறு கண்ணில் சுண்ணாம்பும் என பாஜக இருக்கிறது. சிறுபான்மையினரை ஒரு மாதிரியும், மற்றவர்களை ஒரு மாதிரியும் பாஜக பார்க்கிறது. பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை. எம்.ஜி.ஆருடன் மோடியை அண்ணாமலை ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்" என்று ஜெயக்குமார் காட்டமாக பேசியிருக்கிறார்.