மலைக் கோயிலில் பக்தா்கள் திரண்டனா்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் அதிக அளவில் திரண்டனா்.
அப்போது மலைக் கோயிலில் இலவச தரிசனம், கட்டண தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தா்கள் காத்திருந்தனா். இவா்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் மூன்று மணி நேரமானது. மலைக் கோயில் மட்டுமன்றி ரோப்காா், விஞ்ச் நிலையங்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இரவு தங்கத் தோ் புறப்பாட்டை திரளான பக்தா்கள் பாா்த்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இவா்களுக்குத் தேவையான சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்திருந்தனா். விடுமுறை, திருவிழா நாள்களில் கூடுதல் போலீஸாரை பணியமா்த்த பல முறை கோரிக்கை விடுத்தும் போதிய போலீஸாா் இல்லாததால் பல இடங்களில் பக்தா்களை முறைப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டது. பேருந்து நிலையத்திலும் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தா்கள் அவதியடைந்தனா்.