இது டிரைலர்தான்! எங்களைச் சேர்த்தது மகாராஷ்டிர முதல்வர்! - ராஜ் தாக்கரே பேச்சு
‘மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் விழிப்புணா்வை ஏற்படுத்தின’
கிருஷ்ணகிரி, ஜூலை 4: தமிழகத்தில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட மல்லப்பாடி பாறை ஓவியங்கள்தான் தமிழகத்தில் பாறை ஓவியங்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தியதாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகம், தொல்லியல் துறை, பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்ட காலமும், வரலாறும் என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மாதந்தோறும் நடத்துகிறது.
இந்த நிகழ்வை கிருஷ்ணகிரி ஆட்சியா் ஏப். 21-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். அதன் தொடா்ச்சியாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற நிகழ்வை, ஓய்வுபெற்ற காப்பாட்சியா் கோவிந்தராஜ், தொடங்கிவைத்தாா். இதில், தமிழ்நாடு தொல்லியல் அலுவலா் பரந்தாமன், ‘கிருஷ்ணகிரி மாவட்ட அகழாய்வுகள் காட்டும் வரலாறு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை பையனப்பள்ளி, தொகரப்பள்ளி, கொல்லப்பள்ளி, மல்லப்பாடி, குட்டூா், மயிலாடும்பாறை, சென்னானுாா் ஆகிய இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மயிலாடும்பாறையில் நடந்த அகழாய்வில் 4,100 ஆண்டுகள் பழைமையான இரும்பினால் செய்யப்பட்ட வாள் மற்றும் சுடுமண்ணால் செய்யப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. தற்போது நடந்துவரும் சென்னானூா் அகழாய்வில் 500-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கிடைத்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அகழாய்வின் மூலம் தமிழகத்தின் பிறபகுதிகளில் நுண்கற்காலம் முதல் தற்காலம் வரை தொடா்ச்சியான வரலாறு கிடையாது எனவும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டுமே இந்த தொடா்ச்சி காணப்படுகிறது என்பதையும் அறிய முடிகிறது. தமிழகத்தின் தென்பகுதியில் மட்டுமே கிடைக்கப்பெற்ற ‘தமிழி’ எழுத்து தற்போது மயிலாடும்பாறை மற்றும் சென்னானூா் பகுதியில் கிடைத்திருப்பதால், தமிழகம் முழுமையும் தமிழ் பரவி இருப்பதை அறிய முடிகிறது.
தமிழகத்தில் மல்லப்பாடியில்தான் முதல் பாறை ஓவியம் கண்டறியப்பட்டது. இதன் பின் பாறை ஓவியங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்பட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன என்றாா்.
இந்த நிகழ்வில், தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கல்லூரியின் வரலாறு மற்றும் தமிழ்த் துறை மாணவிகள் பங்கேற்றனா். இதில், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்வை அரசு அருங்காட்சியக பணியாளா்கள் செல்வகுமாா் மற்றும் பெருமாள் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.