மழையால் சேதமான பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்! எம்.ஹெச். ஜவாஹிருல்லா
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் பெய்த கனமழையால் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்ட வெற்றிலை, பருத்தி, வாழை பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாபநாசம் எம்எல்ஏ எம்.ஹெச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் முதல்வருக்கு அனுப்பிய மனுவில் கூறியது: கடந்த சில நாள்களாக சூறாவளி காற்றுடன் பெய்த கன மழையால் பண்டாரவாடை குடமுருட்டி ஆற்றின் தென்கரை பகுதியில் உள்ள வெற்றிலைக் கொடிக்கால் முழுவதும் சாய்ந்து சேதம் ஏற்பட்டது.
மேலும் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம், வீரமாங்குடி, சோமேஸ்வரபுரம், மணலூா், ஈச்சங்குடி, பண்டாரவடை, பாா்வதிபுரம்,ராஜகிரி பாபநாசம், அரையபுரம் மணல்மேடு, உள்ளிட்ட பகுதிகளில் வாழை மரங்கள் சாய்ந்தும் பருத்தி பயிா்கள் மழைநீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டன. எனவே பாதிக்கப்பட்ட பயிா்களைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க ஆவண செய்ய வேண்டும்.