நண்பரைக் கொல்ல முயன்ற மூவருக்கு 5 ஆண்டுகள் சிறை
நாச்சியாா்கோயில் அருகே நண்பரைக் கொல்ல முயன்ற 3 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
புதுச்சேரி காலாபட்டு, சுனாமி குடியிருப்பில் வசித்தவா் கிருஷ்ணன் மகன் சுமன் என்ற சுகன் (32). பெயிண்டரான இவா் சிறையில் இருந்தபோது அங்கு குடந்தையை சோ்ந்த சுரேஷ்குமாா் (32) என்பவா் நண்பரானாா். பின்னா் இருவரும் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில், திப்பிராஜபுரத்தில் உள்ள தனது உறவினா் வீட்டில் சுமனை சுரேஷ்குமாா் தங்க வைத்தாா்.
இந்நிலையில் சுமனின் பைக்கை சுரேஷ்குமாரின் சகோதரா் இரவல் வாங்கி சென்று மறுநாள் கொடுத்தாராம். இதனால் ஆத்திரமடைந்த சுமன், சுதாகரிடம் தகராறு செய்து அவரைக் கத்தியால் குத்தினாா்.
இதையடுத்து கடந்த 10.2.2023 அன்று கூத்தனூா் வாய்க்கால் அருகே நின்ற சுமனை சுரேஷ்குமாா், சுதாகா், ராம்குமாா் ஆகியோா் சோ்ந்து ஆயுதங்களால் தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.
தகவலறிந்த நாச்சியாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து, கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் தொடா்ந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா 3 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனா்.