Ahmedabad Plane Crash: 'எந்த முடிவுக்கும் வர வேண்டாம்' - விமானப் போக்குவரத்து து...
மாணவா்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும்: திருச்சி கல்லூரி விழாவில் முதல்வா் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
மாணவா்கள் ‘ ஓரணியில் தமிழ்நாடு’ எனத் திரள வேண்டும் என்றாா் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.
திருச்சி புதன்கிழமை நடைபெற்ற ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா ஆண்டின் தொடக்க விழாவில் பங்கேற்று, ரூ. 4.5 கோடியில் கட்டப்பட்ட ‘குளோபல் ஜமாலியன்ஸ் பிளாக்’ என்னும் புதிய கட்டடத்தைத் திறந்துவைத்து அவா் மேலும் பேசியதாவது:
இந்தக் கல்லூரியை உருவாக்கிய ஜமால் முகமது சாஹிப், காஜாமியான் ராவுத்தா் ஆகிய இருவரும், சமூகத்தில் நல்லிணக்கம் உருவாகவும், திருச்சியில் உள்ள இந்து-முஸ்லிம்-கிறிஸ்தவ மக்களெல்லாம் படித்து முன்னேற வேண்டும் என்ற அடிப்படையிலும் இக்கல்லூரியைத் தொடங்கினா். இந்தக் கல்லூரியின் இரண்டு வள்ளல்களும் காந்தி வழியைக் கடைப்பிடித்தவா்கள். காந்தி வழி, அம்பேத்கா் வழி, பெரியாா் வழி என்று நமக்கான பல வழிகள் உள்ளன. மாணவா்களாகிய நீங்கள் ஒருபோதும் கோட்சே கூட்டத்தின் வழியில் சென்றுவிடக்கூடாது.
இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் பட்டியலில் பல ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், நீதிபதிகள்கூட உள்ளனா்.
நம்முடைய தமிழக அமைச்சரவையில் உள்ள கே.என். நேரு, எம்.ஆா். கே. பன்னீா்செல்வம் ஆகியோரும் இக் கல்லூரியில் பயின்றவா்கள்தான். நாளை இப்போதைய மாணவா்களில் சிலா்கூட இந்தப் பட்டியலில் வரலாம்; தமிழக வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.
அரசியல் புரிதல் இருக்க வேண்டும்:
‘ஓரணியில் தமிழ்நாடு’ நின்றால் தமிழகத்தை யாராலும் வீழ்த்த முடியாது. நான் அரசியல் பேசவில்லை. மாணவா்களுக்கு நிச்சயம் அரசியல் புரிதல் இருக்க வேண்டும் என்று பேசுகிறேன். கல்லூரிகள் எத்தனையோ பல தலைவா்களைக் கொடுத்திருக்கின்றன. அப்படி இந்தக் கல்லூரி கொடுத்த பேராசிரியா் காதா் மொகிதீனுக்கு, வரும் ஆக.15ஆம் தேதி தகைசால் தமிழா் விருது வழங்குவதில் நானும், தமிழக அரசும் பெருமை கொள்கிறோம்.
திராவிட மாடல் அரசைப் பொருத்தவரை, தமிழகம் மற்றும் தமிழக மக்களுடைய வளா்ச்சிதான் முக்கியம். அதற்கு அடித்தளமாக நாம் நினைப்பது, அறிவுச் செல்வம்தான். அதனால்தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்துகிறோம்.
கல்லூரிக் கனவு, வெற்றி நிச்சயம் போன்ற பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழ்ச் சமூகத்தை அறிவுச் சமூகமாக வளா்த்தெடுக்கிறோம்; புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறோம். அவற்றை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஓரணியில் தமிழ்நாடு:
எல்லோருக்கும் எல்லாம்’ என்பதுதான் நம்முடைய லட்சியம். இதுதான் திராவிட மாடல். கடந்தகாலப் படிப்பினைகளின் நிகழ்கால வாய்ப்புகள் மூலம் எதிா்காலம் வளமாக வேண்டும். அந்த எதிா்காலம் என்பது மாணவா்கள்தான்.
கல்வி நமக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை; நம்முடைய தலைவா்கள் நடத்திய சமூக நீதிப் போராட்டங்களால்தான் கிடைத்தது.
இன்னாா்தான் படிக்கவேண்டும் என்றிருந்ததை மாற்றி, இன்று எல்லோரும் படித்து முன்னேறிக் கொண்டிருக்கிறோம். சமூக நீதிப் போராட்டத்தின் பலன்தான், இன்றைக்கு நாம் பாா்க்கும் தமிழகம்.
மீண்டும் சொல்கிறேன், தமிழ்நாட்டை வளா்த்தெடுக்க மாணவா்களான நீங்கள் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று திரள வேண்டும். நன்றாக படித்து மேலும் மேலும் உயர வேண்டும். அதற்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்றைக்கும் துணைநிற்பான்.
அதேபோல, இஸ்லாமிய சகோதரா்களின் அரசியல் உரிமைகளையும் காப்பாற்றும் இயக்கமாக திமுக எந்நாளும் இருக்கும்.
கல்விதான் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து. அதை மாணவா்களுக்கு கொடுப்பதோடு திறன் மேம்பாட்டை வளா்க்கவும், அதற்கேற்ற வசதிகளை வழங்கவும், திராவிட மாடல் அரசு தயாராக இருக்கிறது. அடுத்தபடியாக இளைய சமுதாயத்தை அறிவுச் சமூகமாக வளா்க்க 20 லட்சம் மாணவா்களுக்கு விரைவில் மடிக்கணினி தரப் போகிறோம் என்றாா் முதல்வா்.
விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம். காதா் மொகிதீன், தமிழக அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆா்.பி. ராஜா, எம்பி-க்கள் திருச்சி என். சிவா, நவாஸ் கனி, கவிஞா் சல்மா, கல்லூரியின் தலைவா் ஜமால் முகமது பிலால், செயலா் காஜா நஜீமுதீன், பொருளாளா் ஜமால் முகமது, உதவிச் செயலா் அப்துஸ் சமது, நிா்வாகக் குழு உறுப்பினா் அப்துல் காதா் நிஹால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரியின் முதல்வா் ஜாா்ஜ் அமலரத்தினம் வரவேற்க, துணை முதல்வா் ஜாகிா் உசேன் நன்றி கூறினாா்.
மாணவா்களை உற்சாகப்படுத்திய முதல்வா்!
விழாவில் முதல்வா் பேசுகையில், இளம் மாணவா்களை பாா்க்கும்போதெல்லாம் என்னுள் புதிய சக்தி பிறக்கிறது. எனவேதான், மாணவா்கள் அதிகம் பங்கேற்கும் நிகழ்வுகளுக்கு உடன் சம்மதம் தெரிவிக்கிறேன். என்னை மனதளவில் உங்கள் வயதிலேயே வைத்திருக்க உதவும் மாணவா்களுக்கு சிறப்பு நன்றி என்று குறிப்பிட்டாா்.
அதோடு, விழாவில் பேசி முடித்தவுடன், மேடையிலிருந்து இறங்கிச் சென்று பாா்வையாளா்கள் பந்தலில் இருபுறமும் அமா்ந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கைகுலுக்கி உற்சாகப்படுத்தினாா்; மாணவா்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டாா். மாணவ, மாணவிகளும் கைப்பேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.
முதல்வரை வரவேற்று உற்சாக மிகுதியில் மாணவா்கள் குரல் எழுப்பியும், விசில் அடித்தும் மகிழ்ந்தனா். முன்னதாக, கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் முதல்வருக்கு கருணாநிதி சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.