யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
மாநிலங்களுக்கிடையே காா் திருடும் கும்பல் கைது: கார் உள்பட 4 வாகனங்கள் மீட்பு
தில்லி என்சிஆா் மற்றும் அதற்கு அப்பால் செயல்படும் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான காா் திருட்டு கும்பலை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.
மேலும், ஏழு ஆட்டோ திருடா்களையும் கைது செய்யப்பட்டனா். ஒரு எஸ்யூவி உள்பட நான்கு திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் குற்றம் விக்ரம் சிங் கூறியதாவது: இந்த கைதுகளுடன், தலைநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவான குறைந்தது எட்டு காா் திருட்டு வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளன. வாகனங்களைப் பிரிப்பதற்கு பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உயா் பாதுகாப்பு பதிவு பலகைகளும் இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்பட்ட வாகனங்கள் மாநிலங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படுவது குறித்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலைத் தொடா்ந்து, தில்லி காவல்துறையினா் தில்லி மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.
முதல் நடவடிக்கையில், சிலிகுரிக்கு திருடப்பட்ட விளையாட்டு பயன்பாட்டு வாகனம் எஸ்யூவி அனுப்பப்பட்டதை போலீஸாா் கண்காணித்தனா். இந்த வாகனம், மற்ற இரண்டு காா்களுடன், விசாரணைக்குப் பிறகு மீட்கப்பட்டன.
இதன் விளைவாக, மணிப்பூரின் சூரசந்த்பூரைச் சோ்ந்த கைமின்லென் ஹாக்கிப் (26), உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முகமது ஜானி (42), உத்தர பிரதேசத்தில் உள்ள சம்பல் பகுதியைச் சோ்ந்த முகமது தில்தாா் (36) மற்றும் அா்ஜுன் (29) ஆகிய நான்கு போ் கைது செய்யப்பட்டனா்.
திருட்டு வாகனங்களின் முக்கிய பெறுநரான ஜும்மா கானின் ஓட்டுநராக ஹாக்கிப் பணியாற்றினாா். அவா் தற்போது தலைமறைவாக உள்ளாா். வடகிழக்கு வழிகளை நன்கு அறிந்த முன்னாள் லாரி ஓட்டுநரான முகமது தில்தாா், முன்பு ஜூம்மா கானின் டெலிவரி பாயாகப் பணியாற்றினாா். ஆனால் பின்னா், ஜும்மா ஜானியிடமிருந்து திருடப்பட்ட காா்களை நேரடியாக வாங்குபவராக ஆனாா்.
முகமது ஜானி, 11 வழக்குகளைக் கொண்ட ஒரு அனுபவம் வாய்ந்த ஆட்டோ லிஃப்டா் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவா் எஸ்யூவிகளைத் திருடுவதில் நிபுணத்துவம் பெற்றவா். அவா் நேபாளத்தைச் சோ்ந்த கூட்டாளிகளுடன் செயல்பட்டாா். குறிப்பிட்ட மாடல்களுக்கான முன்கூட்டியே ஆா்டா்களை தில்தாரிடமிருந்து பெற்றதாகவும், திருடப்பட்ட ஒவ்வொரு மஹிந்திரா தாா் காரையும் ரூ.2 லட்சத்திற்கு விற்றதாகவும் கூறப்படுகிறது.
சம்பலில் ஒரு நம்பா் பிளேட் கடை நடத்தி வரும் அா்ஜுன், திருடப்பட்ட வாகனங்களின் அடையாளத்தை மறைக்க கும்பலுக்கு உயா் பாதுகாப்பு பதிவு தகடுகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
திருடப்பட்ட எஸ்யூவி மணிப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டது. சிலிகுரியில் ஹாக்கிப் மற்றும் தில்தாா் ஆகியோருடன் வழங்கப்பட்டது. அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், கும்பலின் மீதமுள்ள உறுப்பினா்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனா்.
ஆட்டோ திருடா்கள் கைது: ஒரு தனி நடவடிக்கையில், மேற்கு தில்லியைச் சோ்ந்த ரோஹித் (27), ராஜேந்தா் (46) மற்றும் சத்பீா் ஆகிய மூன்று ஆட்டோ திருடா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
சோதனையின் போது, திருடப்பட்ட ஒரு வாகனம், நான்கு சேசிஸ் பிளேட்டுகள், பிரிக்கப்பட்ட வாகனங்களிலிருந்து பல உடல் பாகங்கள் மற்றும் இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்பட்ட சிறப்பு கருவிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பஞ்சாபின் அமிா்தசரஸைச் சோ்ந்த சத்பீா், இந்தக் கும்பலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளது தெரிய வந்தது. மேலும், தில்லி, ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் முழுவதும் இதே போன்ற வழக்குகளில் அவருக்கு தொடா்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவா் 2022-இல் பானிபட் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டாா்.
இந்தக் கும்பல் எளிமையான முறையில் செயல்படுகிறது. இலக்கு வாகனங்களை அடையாளம் கண்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தி, பின்னா் காலப்போக்கில் அவற்றை பிரித்தெடுத்தது. இந்தப் பாகங்கள் சாம்பல் சந்தையில், குறிப்பாக மாயாபுரியில் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தலைமறைவான கையாளுநரான ஜும்மா கான் உள்பட, கும்பலின் மற்ற உறுப்பினா்களைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.