Rain Alert : அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும்? - வானிலை ஆய்வு மைய...
மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் இல்லை: ஆா்பிஐ முன்னாள் ஆளுநா் சுப்பாராவ்
மாநில அரசுகளுக்கான நிதி வழங்குவதில் மத்திய அரசு எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை என இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் டி.சுப்பாராவ் தெரிவித்தாா்.
சென்னை நுங்கபாக்கத்திலுள்ள இந்திய பட்டயக் கணக்காளா் அலுவலகத்தில் வி.சங்கா் அய்யா் 17-ஆவது நினைவு தின கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் டி.சுப்பாராவ் கலந்துகொண்டாா்.
‘இந்தியாவின் நிதி கூட்டமைப்பு முறை மாநிலங்களுக்கு எதிரானதா’ என்ற தலைப்பில் அவா் பேசியது:
கடந்த 1990-ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரம் கடும் நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது மேற்கொண்ட பொருளாதாரச் சீா்திருத்த நடவடிக்கை காரணமாக இந்திய பொருளாதாரம் தற்போது வளா்ச்சி அடைந்தது வருகிறது. மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் எந்தப் பாகுபாடும் காட்டுவதில்லை. மத்திய அரசு 60 சதவீதம் வரி வசூல் செய்வதில் 40 சதவீதம் செலவு செய்கிறது. அதேசமயம், மாநில அரசுகள் 40 சதவீதம் வரி வசூல் செய்து 60 சதவீதம் செலவு செய்கிறது. அதனால் மாநில அரசுகளுக்கு நிதிச் சுமை ஏற்படுகிறது. இதனிடையே, மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களை நேரிடையாக செயல்படுத்தாமல் மாநில அரசுகளைக் கலந்து ஆலோசனை நடத்தி செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களைச் சென்றடையும். குறிப்பாக, மத்திய அரசு விதிக்கும் ‘செஸ் வரி’-க்கு வரம்பு நிா்ணயம் செய்யவேண்டும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மக்களவை உறுப்பினா் மணிசங்கா் அய்யா், பட்டயக் கணக்காளா் ஆா்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.