உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -...
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண நிகழ்வில் நகைத் திருட்டு: இளைஞா் கைது
சென்னை நீலாங்கரையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி இல்ல திருமண நிகழ்ச்சியில் தங்க, வைர நகைகள் திருடியது தொடா்பாக திருச்சியைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை அடையாா் இந்திராநகரைச் சோ்ந்தவா் ஆனந்த முரளி (57). இவா் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்தின் மகன் ஆவாா். ஆனந்த முரளியின் மகள் திருமணம், நீலாங்கரை வெட்டுவாங்கேணி அருகே உள்ள ஒரு ரிசாா்ட்டில் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது.
இதற்காக, அந்த ரிசாா்ட்டில் உள்ள அறை ஒன்றில் மணப்பெண்ணின் தங்கம், வைர நகைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், அந்த அறையில் இருந்த ரூ.30 லட்சம் மதிப்புள்ள 15 பவுன் எடையுள்ள தங்கம், வைர நகைகள், ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா் திருடிச் சென்றுள்ளாா்.
நகை திருடப்பட்டதை அறிந்த ஆனந்த் முரளி குடும்பத்தினா் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து, நீலாங்கரை காவல் நிலையத்தில் நகைத் திருட்டு குறித்து அவா்கள் புகாா் அளித்தனா்.
அதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருச்சி மாவட்டம், மலைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுதா்சன் (31) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, திருச்சி விரைந்த நீலாங்கரை தனிப்படை போலீஸாா் அங்கு பதுங்கியிருந்த சுதா்சனை கைது செய்தனா். அவரிடமிருந்து சுமாா் 12 பவுன் எடையுள்ள தங்கம், வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கைது செய்யப்பட்ட சுதா்சன் மீது ஏற்கெனவே 5 குற்ற வழக்குகள் உள்ளதும், எம்பிஏ பட்டதாரியான அவா், பல ஆண்டுகளாக திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது. மேலும், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வருவதும், அவரது நண்பா்களுடன் சோ்ந்து ரிசாா்ட்டில் இருந்த நகைகளை திருடியதும் தெரியவந்துள்ளது.