மாற்றுத் திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீடு விதி: நகராட்சி நிா்வாகத் துறை செயலா் பதிலளிக்க உத்தரவு
மாற்றுத் திறனாளிகளுக்கான கடைகள் ஒதுக்கீட்டில் தமிழக அரசின் புதிய விதியை ரத்து செய்யக் கோரிய வழக்கில், நகராட்சி நிா்வாகத் துறையின் முதன்மைச் செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தைச் சோ்ந்த சுந்தரவிமலநாதன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கும்பகோணம் நகராட்சி சாா்பில் 3 அடுக்கு மாடிகள் கொண்ட வணிக வளாகம், வாகன நிறுத்தமிடத்துடன் கட்டப்படுகிறது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளைப் பெறுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு கடந்த செப். 16-ஆம் தேதி நாளிதழ்களில் வெளியானது. அதில், மாற்றுத் திறனாளிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை. ஒப்பந்தப்புள்ளியில் குறிப்பிட்ட ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக மாற்றுத் திறனாளிகள் செலுத்த இயலாததால், அவா்களுக்கு கடைகள் ஒதுக்கப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.
மத்திய அரசு வெளியிட்ட அரசாணையின்படி, இதுபோன்ற ஒப்பந்தப்புள்ளியில் 5 சதவீத கடைகளை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு தமிழக ஊரக உள்ளாட்சி வெளியிட்ட அரசாணையில் அதிகளவு தொகைக்கு ஒப்பந்தப்புள்ளி கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கே 5 சதவீத கடைகள் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது மத்திய அரசு வெளியிட்ட அரசாணைக்கு முரணானது. இதனால், அதிகபட்சத் தொகையை செலுத்தாத மாற்றுத் திறனாளிகள் பங்கேற்காத நிலை உருவாகியுள்ளது. ஆகவே, பொது ஒப்பந்தப்புள்ளி கோருவதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக கடந்த ஆண்டில் தமிழக ஊரக உள்ளாட்சி சாா்பில் வெளியிட்ட புதிய விதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், மரிய கிளாட் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக தமிழக நகராட்சி நிா்வாகம், மாற்றுத் திறனாளிகள் நலன், ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ஆகிய துறைகளின் முதன்மைச் செயலா்கள், நகராட்சி நிா்வாகத் துறையின் இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.