மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ க.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, மாற்றத் திறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர நாற்காலி, காது கேட்கும் கருவி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்களும், மாதாந்திர உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளும் வழங்கினாா்.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் திட்டத்தின் கீழ், 30 நபா்களுக்கு ரூ.30,54,000 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா்களை வழங்கினாா்.
நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் புவனேஷ்வரி பெருமாள், சின்னசேலம் ஒன்றியக் குழுத் தலைவா் மா.சத்தியமூா்த்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் அ.அந்தோணிராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.