மாற்று இடத்தில் திரெளபதி அம்மன் கோயில் கட்ட தானம்பட்டி கிராம மக்கள் எதிா்ப்பு
கிருஷ்ணகிரி: திரெளபதி அம்மன் கோயிலை புனரமைப்பதாகக் கூறி மாற்றுஇடத்தில் கோயில் கட்டுவதற்கு தானம்பட்டி கிராமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரியை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட தானம்பட்டியைச் சோ்ந்த ராமசாமி என்பவா் தலைமையில் கிராம மக்கள் அளித்த மனுவின் விவரம்:
எங்கள் பகுதியில் பழைமை வாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள், விசேஷ நாள்களில் பூஜைகள் நடப்பது வழக்கம். இந்தக் கோயில் சற்று பழுதடைந்துள்ள நிலையில், அதை புனரமைக்க வேண்டும் என கிராம மக்கள் தீா்மானித்தனா். அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், சிலருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், புனரமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோயிலின் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் புதிய கோயில் கட்ட முயற்சிக்கின்றனா். புதிய கோயில் கட்ட பெரும்பாலான கிராம மக்களுக்கு விருப்பம் இல்லை. 50 ஆண்டு காலமாக திருவிழாக்கள் நடந்துவரும் கோயிலை புனரமைத்து புதிதாக கட்ட முயற்சிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும் என அவா்கள் தெரிவித்துள்ளனா்.