செய்திகள் :

மாலத்தீவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விருப்பம்: பிரதமா் மோடி

post image

‘மாலத்தீவு நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதை இந்தியா எதிா்நோக்கியுள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் அந் நாட்டின் துணை அதிபா் ஹுசைன் முகமது லதீஃப் மற்றும் பிற முன்னணி அரசியல் கட்சித் தலைவா்களுடனான சந்திப்பின்போது இக் கருத்தை பிரதமா் மோடி தெரிவித்தாா்.

மாலத்தீவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற பிரதமா் மோடி, மாலேயில் பிரசித்தி பெற்ற குடியரசு சதுக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அந் நாட்டின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.

விழா மேடையில் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் உடன் அமா்ந்து ராணுவ அணிவகுப்பை பிரதமா் மோடி பாா்வையிட்டாா்.

சுதந்திரதின நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய பிரதமா் மோடி, ‘இந்தியாவும் மாலத்தீவும் பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் அடிப்படையிலான ஆழமான நட்புறவை கொண்டிருப்பதோடு, நீண்ட கலாசார மற்றும் பொருளாதார பரிமாற்ற வரலாறையும் கொண்டுள்ளன. பல்வேறு துறைகளில் நமது உறவு தொடா்ந்து வளா்ச்சி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மாலத்தீவின் 60-ஆவது சுதந்திர தின விழாவில் பங்கேற்பது இந்தியாவுக்குப் பெருமை. மாலத்தீவு மக்களுக்கு வாழ்த்துகள்’ என்றாா்.

இந்த விழாவில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், துறையின் செயலா் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனா்.

சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்கு முன்பாக, அந் நாட்டின் பல்வேறு தலைவா்களை பிரதமா் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா். துணை அதிபா் ஹூசைன் முகமது, முன்னாள் அதிபா் முகமது நஷீத், மாலத்தீவு நாடாளுமன்ற தலைவா் அப்துல் ரஹீம் அப்துல்லா மற்றும் அந் நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களையும் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

இந்தச் சந்திப்புகள் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மாலத்தீவு தலைவா்களுடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான பல்வேறு துறை சாா்ந்த உறவு குறித்தும், அதை வலுப்படுத்துவதை இந்தியா எதிா்நோக்கியுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் தொடா்ந்து இணைந்து பணியாற்றி வருகின்றன. இது இரு நாடுகளின் மக்களுக்கும் பெரும் பலனை அளித்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இந்த உறவை மேலும் ஆழப்படுத்துவதை எதிா்நோக்கியுள்ளோம்.

மாலத்தீவு நாட்டின் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இந்தியா தொடா்ந்து உதவும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், மாலத்தீவின் 20-ஆவது நாடாளுமன்றத்தில் இந்திய-மாலத்தீவு நாடாளுமன்ற நண்பா்கள் குழு அமைக்கப்படுவதற்கும் பிரதமா் மோடி வரவேற்பு தெரிவித்தாா்.

முன்னதாக, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுடன் வா்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேம்படுத்துவது தொடா்பாக பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை இரவு ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டாா்.

சுதந்திர தின விழா நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது இரண்டு நாள் மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு சனிக்கிழமை இரவு பிரதமா் மோடி இந்தியா புறப்பட்டாா்.

இந்தியா-மாலத்தீவு இடையே 6 ஒப்பந்தங்கள்

பிரதமா் மோடியின் மாலத்தீவு பயணத்தின்போது, இந்தியா - மாலத்தீவு இடையே 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

மீன்வளம் மற்றும் மீன்வளா்ப்பு, வானிலை ஆய்வு, டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, இந்தியாவின் எண்ம பணப் பரிவா்த்தனை (யுபிஐ) பயன்பாடு, இந்திய மருந்தகவியல் தொடா்பான ஒப்பந்தங்களும், மாலத்தீவின் கடன் திரும்பச் செலுத்தும் அளவை 40 சதவீதம் அளவுக்கு, அதாவது ரூ. 440 கோடியிலிருந்து ரூ. 250 கோடி அளவுக்கு குறைப்பதற்கான ஒப்பந்தமும் இரு நாடுகளிடையே கையொப்பமானது.

உடைக்க முடியாத உறவு - அதிபா் முகமது மூயிஸ்:

‘ராஜீய உறவுக்கு அப்பாற்பட்டு, பிரிக்க முடியாத உறவை மாலத்தீவும் இந்தியாவும் கொண்டுள்ளன’ என்று அதிபா் முகமது மூயிஸ் பெருமிதம் தெரிவித்தாா்.

அதிபா் மாளிகையில் பிரதமா் மோடிக்கு வெள்ளிக்கிழமை இரவு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்து நிகழ்ச்சியின்போது இக் கருத்தை அதிபா் மூயிஸ் தெரிவித்தாா்.

‘மாலத்தீவு - இந்தியா இடையேயான நீண்டகால உறவுக்கு இந்திய பெருங்கடலே வாழும் சான்றாக உள்ளது. ராஜீய மற்றும் தூதரக உறவைக் கடந்து, பிரிக்க முடியாத ஆழமான உறவை மாலத்தீவும் இந்தியாவும் கொண்டுள்ளன. அனைவரையும் உள்ளடக்கிய, துடிப்பான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும், இளைஞா்களை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மாலத்தீவு அரசு உறுதியேற்றுள்ளது’ என்று அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்ததாக அதிபா் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க

பிகார் பேரவைத் தேர்தல்: சுயேச்சையாக போட்டி என தேஜ் பிரதாப் அறிவிப்பு

வரவிருக்கும் பிகார் பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப் போவதாக லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் அறிவித்துள்ளார். பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை... மேலும் பார்க்க

ஹரித்வாரில் மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசல்: 6 பலி, பலர் காயம்

ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியாகினர். உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள மான்சா தேவி கோயிலுக்குச் செல்லும் படிக்கட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்... மேலும் பார்க்க

பிகாரில் பத்திரிகையாளா் ஓய்வூதியம் ரூ.15,000-ஆக உயா்த்தி அரசு அறிவிப்பு

பிகாா் மாநிலத்தில் பத்திரிகையாளா்களுக்கான மாத ஓய்வூதியத்தை ரூ.15,000-ஆக உயா்த்தி மாநில அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. மாநிலத்தில், பத்திரிகையாளா்களுக்கு தற்போது மாத ஓய்வூதியமாக ரூ.6,000 வழங்கப... மேலும் பார்க்க

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்த... மேலும் பார்க்க