தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திலிருந்து 1.55 கோடி பேர் நீக்கம்!
``மாலை 6 மணிக்கு பிறகு 76 லட்சம் பேர் வாக்களித்தது எப்படி?'' -தேர்தல் கமிஷனிடம் ஐகோர்ட் கேள்வி
மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால், இந்த வெற்றியை எதிர்க்கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக குற்றம் சாட்டி வருகின்றன. தேர்தல் நாளன்று மாலை 6 மணிக்கு பிறகு அதிக அளவில் கள்ள ஓட்டு போடப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக வஞ்சித் பகுஜன் அகாடி சார்பாக வழக்கறிஞர் சேதன் சந்திரகாந்த் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் தேர்தலுக்கான நேரமான மாலை 6 மணி முடிந்த பிறகு எப்படி 76 லட்சம் வாக்குகள் பதிவானது என்று கேள்வி எழுப்பி இருந்தார். இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக கொடுத்த மனுவை நீதிபதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். பாபாசாஹேப் அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி மாலை 6 மணிக்கு பிறகு 76 லட்சம் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
எனவே, மாலை 6 மணிக்கு பிறகு நடத்தப்பட்ட தேர்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோவை தேர்தல் கமிஷன் தாக்கல் செய்யவேண்டும். தேர்தல் கமிஷன் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றவில்லை என்று வாதித்தார். அதோடு மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்றத் தேர்தல் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். பிரகாஷ் அம்பேத்கரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி அஜய் கட்கரி, இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய தேர்தல் கமிஷன் மற்றும் மாநில தேர்தல் அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு நியாயமான முறையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று சிவசேனா(உத்தவ்) குற்றம் சாட்டி இருக்கிறது. இது தொடர்பாக அக்கட்சியின் எம்.பி.சஞ்சய் ராவுத் அளித்த பேட்டியில்,''தேவேந்திரபட்னாவிஸ் அரசு நியாயமான முறையில் தேர்வு செய்யப்படவில்லை. தேர்தல் தினத்தன்று கடைசி இரண்டு மணி நேரத்தில் திடீரென வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது ஒரு மோசடியாகும். தேர்தல் கமிஷன் இதற்கு சரியான விளக்கம் கொடுக்கவில்லை. 150 தொகுதியில் தலா 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வாக்குகள் திடீரென அதிகரித்து இருக்கிறது. மொத்தம் 76 ஆயிரம் வாக்குகள் இது போன்று பதிவாகி இருக்கிறது. துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மத்திய அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் செயல்படுகிறது. ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா பா.ஜ.க-வால் உருவாக்கப்பட்டது.
எனவே சிவசேனா தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இல்லை. ஏக்நாத் ஷிண்டே கட்சியை சேர்ந்த 20 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க மற்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் தொடர்பில் இருக்கின்றனர்'' என்று தெரிவித்தார். சிவசேனா (உத்தவ்) மற்றும் பிரகாஷ் அம்பேத்கரின் கருத்தை உறுதி செய்யும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார். அவர் பாராளுமன்றத்தில் பேசும்போது மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு 5 மாதத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஹிமாச்சல பிரதேச மக்கள் தொகைக்கு நிகரான வாக்குகள் புதிதாக மகாராஷ்டிராவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் கமிஷன் தேர்தலை வெளிப்படை தன்மையுடன் நடத்துவது அவசியம் என்று தெரிவித்தார். ராகுல் காந்தியின் கருத்து குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சி தேர்தல் தோல்வி குறித்து சுயபரிசோதனை செய்து கொள்வதற்கு பதில் மகாராஷ்டிரா மக்களை அவமதிக்கிறீர்கள். மகாராஷ்டிரா மக்களின் ஜனநாயக முடிவை ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதனால்தான் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ராகுல் காந்தி தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்கவேண்டும்'' என்று தெரிவித்தார்.