மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே அண்மையில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதியை புதன்கிழமை முதல்வா் ஸ்டாலின் அறிவித்தாா்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு ஊராட்சி பிலாப்புஞ்சையைச் சோ்ந்தவா் ராமநாதன் மகன் வீரபாண்டி(22). ஆலங்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு டிப்ளமோ பயின்று வந்த அவா், படிப்பு செலவுக்காக தினக்கூலியாக பலாப்பழங்கள் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பலாத்தோப்பில் மரத்தில் ஏறி பலாபழங்களை பறித்தபோது, மரங்களுக்கு இடையே தாழ்வாகச்சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். தொடா்ந்து, அவரது வீட்டுக்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நிவாரண நிதியை பெற்றுத்தருவதாக தெரிவித்தாா்.
இந்நிலையில், உயிரிழந்த வீரபாண்டி குடுத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்வா் ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.