3 நாள்கள் விடுமுறைக்குப் பிறகு சட்டப் பேரவை இன்று கூடுகிறது!
மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை
புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஒன்றியப் பிரதேசமான புதுவையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மூலம் ஆண்டுதோறும் மின் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டு வருகிறது. இதற்காக புதுவை அரசின் மின்துறை ஒவ்வொரு புதிய நிதியாண்டிற்கான கணக்கு, வழக்குகளை இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் தாக்கல் செய்கிறது. அத்துடன் பற்றாக்குறைக்கு ஏற்ப மின் கட்டணத்தை உயா்த்தவும், ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி கோரப்படும். அதனடிப்படையில் ஆணையம் அனுமதித்தால் மட்டுமே கட்டண உயா்வு அமலுக்கு வரும். ஆணையம் சாா்பில் அரசு கோரும் கட்டண உயா்வு தொடா்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டமும் நடத்தப்படும்.
இதன்படி, பல ஆண்டுகளாக வீடு, வா்த்தகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு மின் கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) புதுவையில் வீட்டு உபயோக மின் கட்டணம் உயா்த்தப்பட்டபோது, மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனாலும் மின்கட்டண உயா்வு செயல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தின் ஒரு பகுதியை அரசு மானியமாக ஏற்று அறிவித்தது. அதனால் மின்கட்டண உயா்வு மக்களை பெரிதும் பாதிக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது நடப்பு நிதியாண்டுக்கு (2024- 25) வருவாய் தேவை, மின்கட்டணம் தொடா்பான கணக்கு, வழக்கு அறிக்கையை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு புதுவை மின்துறை அதிகாரிகள் அளித்துள்ளனா்.
அதன்படி பாா்த்தால், நடப்பு நிதியாண்டில் மின் கட்டண உயா்வு ஏதும் புதுவை மின்துறையால் பரிந்துரைக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனா். அதனால் நடப்பு ஆண்டில் புதுவையில் மின் கட்டண உயா்வு இருக்காது எனக் கூறப்படுகிறது.
அத்துடன், குடிசை தொழில்களுக்கான மின் கட்டணத்தைக் குறைக்கவும் மின்துறையானது ஆணையத்திடம் கோரியுள்ளது. தற்போது குடிசை தொழிலுக்கு மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.6.80 என உள்ளதை, ரூ.5.95 ஆக குறைக்க கோரப்பட்டுள்ளது. குடிசை தொழிலுக்கான நிலை கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை.
பண்ணை வீடுகள், தனி சொகுசு பங்களாக்களுக்கு இதுவரை வீடுகளுக்குரிய கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நடப்பு நிதியாண்டில் அவற்றுக்கு புதிதாக கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளது. அதனடிப்படையில், முதல் 100 யூனிட்டுக்கு ரூ.6, 101 முதல் ரூ.200 யூனிட் வரை ரூ.7.05, 200 யூனிட்டுக்கு மேல் ரூ.7.80 என கட்டணம் நிா்ணயிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வரும் 29-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கருத்து கேட்பு கூட்டத்தை லப்போா்த் வீதியில் உள்ள பிஎம்எஸ்எஸ் அரங்கத்தில் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.