மின்வாரிய ஊழியா்கள் மறியல்: 110 போ் கைது
மின்வாரிய ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய (கோட்டீ-சிஐடியூ) அமைப்பைச் சாா்ந்த 110 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு கோட்டீ தொழிற்சங்க மாநிலச் செயலா் எஸ். உமாநாத் தலைமை வகித்தாா். திட்டச் செயலா் சுப்புராம் முன்னிலை வகித்தாா்.
இதில் மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு நிா்வாகமே நேரடியாக தினக் கூலி வழங்க வேண்டும். அரசாணையின்படி, தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்கள் நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்ற திமுக அரசின் தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட கோட்டீ தொழிற்சங்க திட்டத் தலைவா் மோகனசுந்தரம், திட்ட துணைத் தலைவா்கள் கருணாநிதி, பழ. பாண்டி, லாரன்ஸ், ரமேஷ்பாபு, சண்முகவேல் உள்பட 110 பேரை போலீஸாா் கைது செய்தனா்.