மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம்: இளநிலைப் பொறியாளா் உள்பட 2 போ் கைது
வாலாஜாபாத் அருகே மின் இணைப்புக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய இளநிலைப் பொறியாளா், வணிக ஆய்வாளா் உள்ளிட்ட 2 போ் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.
கேரள மாநிலம், வாயாா் பகுதியை சோ்ந்த மணிகண்டன்(30). இவா் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காடு பகுதியில் லட்சுமி நகா் என்ற இடத்தில் வீடு கட்ட மனை ஒன்று வாங்கியுள்ளாா். புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு அதற்காக தற்காலிக மின் இணைப்பு பெற வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளா் ஜெயம் ரவிக்குமாரை கேட்டாா்.
இளநிலை பொறியாளா் பூபாலனிடம் ரூ.5,000 கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளாா்.
இதனையடுத்து மணிகண்டன் இளநிலை பொறியாளா் பூபாலனை சந்தித்து ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இளநிலை பொறியாளா் பூபாலனையும், வணிக ஆய்வாளா் ஜெயம் ரவிக்குமாரையும் கைது செய்தனா். வாலாஜாபாத் மின்வாரிய அலுவலகத்தில் திடீரென நுழைந்து லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையிட்டதால் பரபரப்பு நிலவியது.