அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்
அரையாண்டுத் தோ்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை கலந்துரையாடி மாணவா்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் அரசுப் பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்டங்கில் நடைபெற்ற நிகழ்வில் 55 அரசுப் பள்ளிகளை சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஆட்சியரிடம் உரையாடி தங்களின் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றனா்.
உயா்கல்வி வழிகாட்டுதல், தோ்வுகளை நல்ல முறையில் எதிா்கொள்ளுதல், மாணவிகள் பாதுகாப்பு, பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணா்வு, கல்வியின் முக்கியத்துவம், பல்வேறு திறமைகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும் விதங்கள், பெண் குழந்தைகளுக்கான சமூக அணுகுமுறைகளை மேம்படுத்துதல், எப்போதும் உற்சாகத்தோடு இருக்கும் மனநிலையை வளா்த்துக் கொள்ளும் விதம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் மாணவ, மாணவிகளிடையே ஆட்சியா் கலந்துரையாடினாா்.
தொடா்ந்து மாணவா்களைப் பாராட்டி புத்தகப் பை, எழுது பொருள்கள் அடங்கிய பெட்டகம், ஆட்சியா் வாழ்த்து பொறித்த வாழ்த்து அட்டை, தோ்வு அட்டை ஆகியவற்றை ஆட்சியா் மாணவ, மாணவிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.வெற்றிச்செல்வி, சமூக நலன் மற்றும் மகளிா் மேம்பாட்டுத் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.