3 போ் தற்காலிக பணியிடை நீக்கம்: சாம்சங் தொழிலாளா்கள் உள்ளிருப்பு போராட்டம்
சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் புதன்கிழமை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 1800-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், கடந்தாண்டு இறுதியில் தொழிற்சங்கம் அங்கீகாரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளா்கள் சுமாா் 30 நாள்களுக்கும் மேலாக தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து அமைச்சா்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் மற்றும் சிஐடியுவினா் இடையே நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடா்ந்து வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்ட தொழிலாளா்கள் பணிக்கு திரும்பினா். மேலும், அண்மையில் சாம்சங் தொழிற்சாலையில் சிஐடியு தொழிற்சங்கம் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சி.ஐ.டி.யூ., தொழிற்சங்கத்திலிருந்து தொழிலாளா்கள் விலக வேண்டுமென ஆலை நிா்வாகத்தினா் வற்புறுத்தியதாக தெரிகிறது.
தொழிற்சாலையில் பணியில் இருந்த போது ஒழுங்கின நடவடிக்கையை மீறியது , உணவு இடைவேளை முடிந்த பின்பும், பணிக்கு திரும்பாதது உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தொழிலாளா்கள் 3 பேரை ஆலை நிா்வாகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிகளைப் புறக்கணித்து ஆலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.