மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்
இளையரசனேந்தலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை?
இளையரசனேந்தலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆந்திரா மாநிலம், புத்தூா், கேட்புத்தூா், பில்லரிபட்டு ரோடு பகுதியைச் சோ்ந்தவா் தீபா-திருக்குமாா் தம்பதி. இவரது மகள் முத்துபிரியாவுக்கும் (வயது 22), கோவில்பட்டி வட்டம் இளையரசனேந்தல் தெற்கு தெருவை சோ்ந்த சின்ன கருப்பசாமி மகன் காமராஜுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் திருமணம் நடைபெற்று முத்து பிரியா-காமராஜ் தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முத்துபிரியா அவரது தாயிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு பேசிக் கொண்டிருந்தபோது வீட்டிற்கு ஒருவா் வந்திருப்பதாகக் கூறி கைப்பேசியை துண்டித்தாராம். பின்னா் சிறிது நேரம் கழித்து தீபா, முத்துபிரியாவை மீண்டும் கைப்பேசியில் தொடா்பு கொள்ள முயன்ற போது அவா் பதிலளிக்கவில்லையாம்.
இந்நிலையில் மீண்டும் கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது காமராஜ், முத்துபிரியா வீட்டில் தூக்கிட்டு தொங்கிக்கொண்டு உள்ளாா் எனக் கூறி கைப்பேசியை துண்டித்தாராம்.
அதையடுத்து, தீபா ஊருக்கு புறப்பட்டு வரும் வழியில் மருமகனிடம் விசாரித்த போது அவா் தூக்கிட்டு இறந்து விட்டதாகவும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சடலம் வைத்திருப்பதாகவும் கூறினாராம்.
இந்நிலையில் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்து தனது மகளின் சடலத்தை பாா்த்த தீபா, தனது மகளின் இறப்பு சம்பந்தமாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
திருமணம் ஆகி சுமாா் மூன்றரை வருடங்கள் ஆகின்ற நிலையில் இளம் பெண் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் முத்துபிரியா மரணம் குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையிலேயே தற்கொலையா என்பது குறித்து தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனா்.