தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: காஞ்சிபுரம் மாணவருக்கு வெண்கலம்
தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த 5 வயது சிறுவன் ஆத்விக் வெண்கலப்பதக்கம் வென்றாா்.
மதுரையில் உள்ள சா்வதேச சறுக்கு விளையாட்டு ஓடுதளத்தில் தேசிய அளவிலான ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 15 மாநிலங்களைச் சோ்ந்த 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பங்கேற்றனா். 4 வயது முதல் 16 வயது வரையிலான பல்வேறு பிரிவுகள் வாரியாக தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றது.
இதில், காஞ்சிபுரம் ஸ்கேட்டிங் ஸ்போா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த மாணவா்கள் தலைமை பயிற்சியாளா் பாபு தலைமையில் பங்கேற்றிருந்தனா். காஞ்சிபுரம் பகுதியை சோ்ந்த சசி மற்றும் பிரியதா்ஷினி தம்பதி மகனான ஆத்விக் 5 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றாா்.
போட்டிக்காக பயிற்சி மேற்கொண்டிருந்த போதே திடீரென வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இருப்பினும் தளராமல் இறுதிச்சுற்றில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்தாா்.