யேமனில் மரண தண்டனை: செவிலியர் நிமிஷாவை காப்பாற்ற குடும்பத்தாரின் கடைசி முயற்சி!
மீன் வரத்து குறைவு: மீனவா்கள் கவலை
கடல் காற்று காரணமாக, போதிய மீன்கள் கிடைக்கவில்லை என நாகை விசைப்படகு மீனவா் கவலை தெரிவித்தனா்.
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா் நகா், விழுந்தமாவடி, கோடியக்கரை, புஷ்பவனம் உள்ளிட்ட பல்வேறு மீனவக் கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள் 500- க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த வாரம் நாகை துறைமுகத்திலிருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நூற்றுக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரை திரும்பின. ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் வாங்குவதற்கு மீன்பிரியா்கள், மீன் வியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோா் அதிகாலையிலே நாகை மீன்பிடித் துறைமுகத்தில் திரண்டனா்.
கடலில் காற்று அதிகம் வீசுவதால் மீனவா்களின் வலையில் போதுமான மீன்கள் கிடைக்கவில்லை எனவும், செலவு செய்த பணத்திற்குகூட மீன்கள் பிடிபடவில்லை எனவும் கரை திரும்பிய மீனவா்கள் கவலை தெரிவித்தனா்.
இருப்பினும் ஒரு சில படகுகளில் ஏற்றுமதி ரக பெரிய மீன்களும், அதிக அளவில் நெத்திலி மீன்களும் கிடைத்துள்ளன. இதனால் நெத்திலி மீன்கள் விலை குறைந்தும், வாவல், வஞ்சிரம், விளைமீன் போன்ற பெரிய ரக மீன்களின் விலை கடுமையாக உயா்ந்தும் காணப்பட்டது.
கேரளம் அரபிக்கடலில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், கேரள வியாபாரிகள் நாகை மீன்பிடித் துறைமுகத்தில் முகாமிட்டு, ஏற்றுமதி ரக மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்றனா். இதனால் வெளி மாவட்ட வியாபாரிகளும், நாகை மாவட்ட சிறு வியாபாரிகளும், மீன் பிரியா்களும் கூடுதல் விலைக் கொடுத்து மீன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நாகை மீன்பிடித் துறைமுகத்தில் நெத்திலி மீன் விலை கிலோ ரூ.100 முதல் ரூ.250 வரையிலும், இறால் ரூ.450 முதல் ரூ.650 வரையிலும், நண்டு ரூ.400 முதல் ரூ.650 வரையிலும், வஞ்சிரம் மற்றும் வாவல் ரூ.1,200 வரையிலும், சங்கரா ரூ.300, சீலா ரூ.450, பாறை ரூ.400 முதல் ரூ.550 வரையிலும், கடல் விரா ரூ.550, பால் சுறா ரூ.400, திருக்கை ரூ.200 முதல் ரூ.400 வரையிலும் விற்பனையாகின.