முகூா்த்தநாளையொட்டி பழனி மலை அடிவாரத்தில் குவிந்த மக்கள் கூட்டம்
முகூா்த்த நாளை முன்னிட்டு பழனி அடிவாரம், கிரி வீதியில் திங்கள்கிழமை மக்கள் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோயில் நகரான பழனியில் பல்வேறு இடங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் இல்லத் திருமணங்களை நடத்துகின்றனா். இதனால் முகூா்த்த நாள்களின்போது மலை அடிவாரத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம்.
இந்த நிலையில், ஆனி மாதத்தின் கடைசி முகூா்த்த நாளான திங்கள்கிழமை திருமண மண்டபங்களுக்குச் சென்ற கூட்டம், திருஆவினன்குடி கோயிலில் திருமணம் செய்ய வந்தவா்கள் கூட்டம் என பொதுமக்கள் குவிந்தனா்.
காலை 6 மணி முதலே இருசக்கர வாகனம், காா்கள் செல்ல முடியாத அளவுக்கு மக்கள் கூட்டமும், சாலையின் இருபுறம் வாகன அணிவகுப்பும் காணப்பட்டன. திருஆவினன்குடி கோயிலில் அதிகாலை முதலே திருமணம் செய்ய ஏராளமானோா் மாலையுடன் காத்திருந்தனா்.
இதுபோன்ற முகூா்த்த நாள்களில் திருமணம் செய்யும் மக்களுக்கென முன்கூட்டியே கோயில் நடையைத் திறக்க அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.