முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க கோரிக்கை
உதகை அருகேயுள்ள முட்டிநாடு கிராமத்துக்கு முறையான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையை அடுத்துள்ள முட்டிநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிவசெந்தூா் நகா், செல்வி நகா், ஈஸ்வா் நகரில் சுமாா் 600 படுகா் இன குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இப்பகுதி மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்கும், பொதுமக்கள் பணிக்காகவும் உதகை மற்றும் குன்னூருக்கு நாள்தோறும் சென்று வருகின்றனா். இதற்கு அவா்கள் அரசுப் பேருந்துகளையே நம்பி உள்ளனா்.
முட்டிநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கு காலை 6, 8, 10 மற்றும் 11 மணிக்கும், உதகையில் இருந்து மதியம் 1.30, 3.30, மாலை 5.30 , இரவு 7.30 மணிக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
இதேபோல, குன்னூா் செல்லும் பேருந்து காலையில் இரண்டு முறையும், மதியம், இரவு மூன்று முறையும் இயக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்தப் பேருந்து சேவை தற்போது மாற்றப்பட்டு உதகைக்கு காலை இரண்டு முறையும், மதியம் மற்றும் மாலை மூன்று முறை மட்டுமே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பணிக்குச் செல்வோா் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், பழைய நேரப்படியே பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேருவிடம் சம்பந்தப்பட்ட மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.