கூடலூா் அருகே குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்!
கூடலூரை அடுத்துள்ள மரப்பாலம் பகுதியில் குடிநீா் வழங்கக்கோரி பெண்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குள்பட்ட அட்டிக்கொல்லி கிராமத்துக்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மரப்பாலம் பகுதியில் காலிக் குடங்களுடன் கூடலூா்-கோழிக்கோடு நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த தேவாலா போலீஸாா் விரைந்துவந்து, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.