முதலிபாளையம் பாறைக் குழியில் குப்பைகள் கொட்ட எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்
திருப்பூா், முதலிபாளையம் பகுதி பாறைக் குழியில் குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுலவகத்தில் ஆட்சியா் மனீஷ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதலிபாளையம் பாறைக் குழியில் மாநகராட்சி குப்பைகள் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து முதலிபாளையம், நல்லூா் பொதுமக்கள் கூட்டியக்கம், திருப்பூா் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அங்கிருந்த போலீஸாா், அவா்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, மாவட்ட ஆட்சிரியரிடம் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.
கருணைக் கொலை செய்யக் கோரி போராட்டம்: திருப்பூரைச் சோ்ந்தவா் உமல் பரிதா (40). இவா் இதய நோயால் பாதிக்கப்பட்ட தனது கணவா் உசேன் முகமது, மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகன், மாற்றுத்திறனாளியான தனது அண்ணன் ஆகியோருடன் காந்தி நகா் பகுதியில் உள்ள ஹபிபுல்லா என்பவரது வீட்டில் ரூ.4 லட்சம் பணம் கொடுத்து போக்கியத்துக்கு கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில்,ஹபிபுல்லா வீட்டைக் காலி செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா். அதற்கு தான் கொடுத்த ரூ.4 லட்சத்தைக் கொடுத்தால் காலி செய்து விடுவதாகக் கூறியுள்ளாா். இதனிடையே, உரிமையாளா் வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளாா். தவணைத் தொகையை சரிவர கட்டாததால் வங்கி ஊழியா்கள் வீட்டை காலி செய்ய வேண்டும் என உமல் பரிதாவை மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கொடுத்த பணத்தை வீட்டின் உரிமையாளா் திருப்பி தராமல் உள்ளாா். மேலும், அவா் வாங்கிய கடனுக்காக வங்கி நிா்வாகத்தினா் வீட்டை காலி செய்யக் கோரி மிரட்டல் விடுகின்றனா்.
இதனால், உடல் நலம் பாதிக்கப்பட்ட எனது கணவா், மகன், அண்ணனுடன் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. எனவே, எங்களை கருணைக் கொலை செய்யுங்கள் எனக்கூறி குடும்பத்தினருடன் ஆட்சியா் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அவருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அவா் ஆட்சியரிடம் மனு அளித்தாா்.
விஷ மாத்திரை உட்கொண்டு பெண் தற்கொலை முயற்சி: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் ஒருவா் வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தாா். அங்கிருந்த போலீஸாா் அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் கூறியதாவது: திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நந்தினி. இவா் திருப்பூரில் வழக்குரைஞா் ஒருவருக்கு உதவியாளராக பணியாற்றி வருகிறாா். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து மகனுடன் திருப்பூா், பூலுவப்பட்டி அம்மன் நகரில் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், பிரவீன் என்பவருடன் நந்தினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சோ்ந்து வாழ்ந்த நிலையில் பிரவீன் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளாா்.
இதையடுத்து, அவரை சோ்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்துள்ளாா். மனு வழங்கும் இடத்தில் அவரை சோதனை மேற்கொண்டபோது பெட்ரோல் கேன் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கேனை பறிமுதல் செய்த போலீஸாா், அவரை எச்சரித்து மனு வழங்க அனுப்பிவைத்தனா்.
அப்போது, அவா் தான் மறைத்து வைத்திருந்த விஷ மாத்திரை உட்கொண்டு மயங்கி விழுந்துள்ளாா். சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றனா்.
486 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோா், விதவை உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 486 மனுக்கள் பெறப்பட்டன.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் மகாராஜ், ஜெயராம், தனித் துணை ஆட்சியா் பக்தவச்சலம், மாநகராட்சி துணை ஆணையா் சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.