`முதல்வர் தாத்தா எங்களால ஸ்கூலுக்குப் போக முடியல!' - சென்னைக்குள் ஒரு இரயில்வே தீவு
சென்னையின் மின்ட் பகுதியின் போஜராஜ நகரின் மக்கள் இன்று காலையில் ஒரு போராட்டத்தை நடத்தி முடித்திருக்கின்றனர். தங்களின் பகுதியில் இரயில்வே சுரங்கப்பாலத்தை கட்டி முடிக்காமல் வைத்திருப்பதால் அந்தப் பகுதியிலுள்ள 6000 குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர். அதற்காகத்தான் தெருவில் இறங்கி போராடவும் செய்திருக்கிறார்கள்.
பிரச்னை என்னவென்பதை முழுமையாக அறிய போராடிய போஜராஜா நகர் சுரங்கப்பாதைக்கான மக்கள் கூட்டமைப்பை தொடர்புகொண்டு பேசினோம். 'ஒரு சுரங்கப்பாதை கட்டுறதுக்கு 10 வருசமா சார்..' என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் அவர்களின் பிரதிநிதியான முகமது ஆசிப் எனும் வழக்கறிஞர்.
அவர் பேசுகையில், 'சென்ட்ரலை நோக்கி 4 இருப்புப்பாதைகள் இந்த வழியாகச் செல்கிறது. போஜராஜ ரகர், ஸ்ரீனிவாசபுரம், மின்ட் மார்டன் சிட்டி என மூன்று பகுதிகளிலும் சேர்த்தும் மொத்தம் 6000 குடும்பங்கள் இருக்கிறோம். இந்த மூன்று பகுதி மக்களும் இரயில்வே கேட்டை தாண்டிதான் ஏரியாவை விட்டு வெளியே செல்ல முடியும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 41 இரயில்கள் இந்த இரயில்வே கேட்டை தாண்டி செல்கின்றன. 24 மணி நேரத்தில் 41 இரயில்கள் கடந்து செல்ல அதற்காக 41 முறை இரயில்வே கேட் அடைக்கப்பட்டால் மக்கள் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும் என்பதை நீங்களே யோசித்தே பாருங்கள்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 7 சரக்கு ரயில்கள் இந்த வழியைக் கடந்து செல்கின்றன. சரக்கு இரயில்களை திடீரென இங்கேயே நிறுத்தியும் விடுவார்கள். கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு கேட்டை அடைத்து வைத்திருப்பார்கள். சரக்கு இரயில் கீழ் பாகம் கொஞ்சம் விசாலமானதாக இருக்கும்.
அவசரமாக செல்ல வேண்டியவர்கள் சரக்கு இரயிலின் அடியின் குனிந்து அபாயகரமான முறையில் கேட்டை கடந்து செல்வார்கள். மருத்துவ அவசரமென்றாலும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்துக்கு ஏரியாவுக்குள் வர முடியாது. இதனாலயே பல உயிர்களை இழந்திருக்கிறோம். படிப்பில் வேலையில் என பலவிதத்திலும் இடர்களை சந்தித்திருக்கிறோம். எங்கள் மக்கள் பல காலமாக கோரிக்கை வைத்த பிறகு இங்கே ஒரு சுரங்கப்பாதையை அமைக்கும் திட்டத்தை 2010 இல் தெற்கு இரயில்வே வெளியிட்டது.
ஆனாலும் சுரங்கம் அமைக்க பல துறைகளின் அனுமதியும் ஒத்துழைப்பும் தேவைப்பட்டது. மின்வாரியம், குடிநீர் வாரியம், பெட்ரோலியம் என பல துறைகளிலும் அனுமதி வாங்கிதான் திட்டத்தை செயல்படுத்த முடியும். அதற்காக 6 ஆண்டுகளை எடுத்துக்கொண்டார்கள். 2016 இல்தான் சுரங்கப்பாதைக்கான வேலையை தொடங்கினார்கள். 1.49 கோடி ரூபாயை ஒதுக்கி இரயில்வே வேலையை தொடங்கியது. ஆனால், சுரங்கப்பாதைக்காக குழிதோண்டும் போது தண்ணீர் தேங்குகிறது என்பதைக் காரணம் காட்டி வேலையை அப்படியே நிறுத்திவிட்டார்கள். 2022 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியை மறு ஆய்வுக்கு உட்படுத்தி 20 கோடியாக உயர்த்தினார்கள்.
2024 ஜூலைக்குள் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார்கள். ஆனால், இப்போது வரை சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கே வரவில்லை. பெரும்பாலான பணிகள் இன்னும் முடியவில்லை. வெறும் இரண்டே இரண்டு நபர்களை வைத்து வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களெல்லாம் இணைந்து போராட போகிறோம் என தெரிந்தவுடன் தொகுதி எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தி சார்பில் 80% பணிகள் முடிந்துவிட்டதாகவும் மே மாதத்துக்குள் சுரங்கப்பாதை திறக்கப்படும் என பேனர் வைக்கிறார்கள். ஆனால், அதற்கான சாத்தியம் எதுவுமே தெரியவில்லை. அரசு விரைந்து இதில் தலையிட்டு எங்களின் இன்னல்களை போக்க வேண்டும்.' என ஆதங்கத்தோடு பேசி முடித்தார் ஆசிப்.
'முதல்வர் தாத்தா எங்களால ஒழுங்கா ஸ்கூலுக்குப் போக முடியல...' என்ற பதாகைகளோடு சிறுவர்களும் கூட மக்களோடு போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். இராயபுரம் எம்.எல்.ஏ ஐட்ரீம் மூர்த்தியும் போராட்டத்துக்கு வந்து மக்களிடம் நம்பிக்கை வார்த்தைகளை பேசியிருக்கிறார். ஆனாலும் அவர்களின் ஆதங்கம் குறையவில்லை.
பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னை மாநகரத்தில் ஒரு பகுதி மக்கள் ஒரு நாளைக்கு 41 முறை இரயில்வே கேட்டில் காத்திருக்க வேண்டும் என்பது கொடுமை.