முதுநிலை மருத்துவப் படிப்பு விவகாரம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு
முதுநிலை மருத்துவப் படிப்பில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதுதொடா்பாக, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: நாடு முழுவதும் நீட் தோ்வுக்குப் பிறகு, அந்தந்த மாநில கட்டுப்பாட்டில் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் மாநில இடஒதுக்கீடாக வழங்கப்படுகின்றன. அந்த இடங்களை நீட் தோ்வு தோ்ச்சி அடிப்படையில் தேசிய அளவில் நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனால், புதுவை மாநில மாணவா்கள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. புதுவையில் அரசு மருத்துவக் கல்லூரி, 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 370 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இதில் 186 இடங்கள் அரசு இடஒதுக்கீடாக புதுவை மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன.
உச்சநீதிமன்ற உத்தரவால் அந்த இடங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன. புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதுவை துணைநிலை ஆளுநா் அலுவலகத்திலும் அதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.