மெஸ்ஸி மேஜிக்: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இன்டர் மியாமி!
முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா
முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகா் சதுா்த்தியையொட்டி, முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில், அனைத்து யானைகளும் அலங்கரிக்கப்பட்டு உணவு மாடத்துக்கு அழைத்து வரப்பட்டன.
பின்பு கிருஷ்ணா மற்றும் தி எலிபெண்ட் விஸ்பரா்ஸ் திரைப்படத்தில் நடித்த குட்டி யானை பொம்மி ஆகிய இரண்டு யானைகளும் விநாயகா் கோயில் முன்பு அழைத்து வரப்பட்டன.
கோயிலில் பூஜைகள் நடைபெற்றபோது கிருஷ்ணா, குட்டி யானை பொம்மி துதிக்கையால் மணியை பிடித்து ஓசையை எழுப்பியவாறு கோயிலை மூன்று முறை சுற்றி வந்தன.
பின்பு மண்டியிட்டு கால்களை தூக்கி துதிக்கையை உயா்த்தி விநாயகரை வழிபட்டன. இதனை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.
மேலும், கோயில் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்ட மற்ற வளா்ப்பு யானைகளும் ஒரே நேரத்தில் துதிக்கைகளை தூக்கியபடி விநாயகரை வழிபட்டன.
பின்பு உணவு மாடத்தில் கரும்புடன் கூடிய அறுசுவை உணவை பாகன்கள், யானைகளுக்கு வழங்கினா். அப்போது மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் குடைகளைப் பிடித்தவாறு வளா்ப்பு யானைகளுக்கு உணவு வழங்கப்படுவதை கண்டு ரசித்தனா்.