மும்பை: ஒரு கப் தேனீர் ரூ.1000: ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் பில் பார்த்து அதிர்ச்சியான வெளிநாட்டு இந்தியர்!
இந்தியாவை சேர்ந்த பரிசிட் பலூசி என்பவர் துபாயில் நீண்ட நாட்களாக வசித்து வருகிறார். அங்கேயே குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார். இந்தியாவிற்கு தனிப்பட்ட பயணமாக வந்திருந்தார். அவர் மும்பையில் வந்து இறங்கியவுடன் இந்தியாவில் முதலில் ஒரு தேனீர் குடிக்கலாம் என்று கருதினார். உடனே அருகில் இருந்த ஃபைவ் ஸ்டார் நட்சத்திர ஹோட்டலுக்கு தேனீர் குடிக்க சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை நன்றாக வரவேற்று தேனீர் வழங்கினார்கள். ஆனால் தேனீர் குடித்து முடித்த பிறகு அவர்கள் கொண்டு வந்து கொடுத்த பில்லை பார்த்து பலூசி அதிர்ச்சியாகிவிட்டார். ஒரு கப் தேனீர் குடித்ததற்கு ரூ.1000 பில் கொடுத்தார்கள்.

அவர்களிடம் அந்த நேரம் எந்த வாக்குவாதமும் செய்யாமல் பணத்தை கொடுத்துவிட்டு வந்துவிட்டார். தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ''நான் வெளிநாட்டு வாழ் இந்தியர். இந்தியாவில் ஏழைகள் இல்லை என்று நினைக்க தோன்றுகிறது. ஒரு கப் தேனீர் மும்பை நட்சத்திர ஹோட்டலில் ரூ.1000த்திற்கு கிடைக்கிறது. நான் இந்தியாவை விட்டு வெளியேறும்போது பங்குச் சந்தையில் ரூ.1,000 போட்டுச்சென்றால் இப்போது என்ன நடந்திருக்கும். கடந்த காலத்திற்கும் இன்றைய காலத்திற்கும் இடையிலான வேறுபாட்டை எடுத்துக்காட்டினர்.
இந்தியாவிற்கு வந்தால் அனைத்தும் மலிவாக கிடைக்கும் என்று அனைவரும் நினைப்பதுண்டு. நான் வெளிநாட்டில் டாலர் மற்றும் திர்ஹாம்களில் சம்பாதிப்பதால் என்னால் ஆடம்பரமாக செலவிட முடிகிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார். அவரது வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஒருவர், நீங்கள் தேனீர் குடிக்க ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு சென்று இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தேனீர் குடிக்கவேண்டும் என்று நினைத்தால் ரூ.1000 அல்லது அதற்கு மேலும் செலவு செய்யவேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் வெளியிட்டுள்ள பதிவில், "இந்த நபர் தனது செல்வச் செழிப்பைக் காட்டுகிறார். ஒரு கப் தேனீர் இன்னும் ரூ.10க்குக் கிடைக்கிறது. நீங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினால் அல்லது ஒரு ஆடம்பரமான உணவகத்தில் தேனீர் அருந்தினால், நீங்கள் அதிகமாகச் செலவு செய்ய வேண்டியிருக்கும்" என்று கருத்து தெரிவித்தார். பலூசி வெளியிட்ட வீடியோ வைரலானது. அவரது வீடியோவை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.