மும்பை: கடலில் தத்தளித்த 100 பேர்; பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்தில் 13 பேர் இறப்பு!
மும்பை கேட்வே ஆப் இந்தியாவில் இருந்து எலிபெண்டா கேவ்ஸ் உட்பட பல இடங்களுக்கு பயணிகள் படகு இயக்கப்படுகிறது. கேட்வே ஆப் இந்தியா அருகில் தான் கடற்படை தளமும் இருக்கிறது. எலிபெண்டா கேவ்ஸ் மிகவும் பிரபலமான சுற்றுலா மையமாகும். இதனால் கடலில் கடற்படைக்கு சொந்தமான படகுகளில் நடமாட்டம் அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். அதுவும் பிளாஸ்டிக் விரைவு படகுகள் கடலில் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். நேற்று மாலை கேட்வே ஆப் இந்தியாவில் பயணிகள் படகு ஒன்று 110 பயணிகளை ஏற்றிக்கொண்டு எலிபெண்டா கேவ்ஸ் பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. நீல் கமல் என்ற அப்படகு கடலில் சென்று கொண்டிருந்தபோது அருகில் கடற்படையினர் விரைவு படகு ஒன்றின் எஞ்சினை சோதனை செய்து கொண்டிருந்தனர். அந்நேரம் கடற்படை விரைவு படகின் எஞ்சின் தனது கட்டுப்பாட்டை இழந்து கண்மூடித்தனமாக செல்ல ஆரம்பித்தது.
படகை இயக்கியவர்கள் அதனை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சி பலனலிக்கவில்லை. அப்படகு பயணிகள் படகான நீல் கமல் படகு மீது வேகமாக மோதிக்கொண்டது. இதில் பயணிகள் படகில் இருந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் கடலுக்குள் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். கடற்படை படகுகள் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டன. இந்த விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவரும், படகு தயாரிக்கும் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பேரும் உயிரிழந்ததாக கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக பயணிகள் படகு கடலில் மூழ்குவதாக செய்தி வெளியானது. ஆனால் அதன் பிறகுதான் கடற்படை படகு அதன் மீது மோதியது தெரிய வந்தது.
படகுகள் மோதிக்கொண்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் அதன் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியா பக்கங்களில் வைரலானது. மும்பை கடல் பகுதியில் நடந்த இப்படகு விபத்து குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிர்ச்சியும் இரங்கலும் தெரிவித்துள்ளார். பயணிகள் படகில் இருந்தவர்கள் உயிர்காக்கும் ஜாக்கெட் அணிந்து கொண்டு கடலில் தத்தளித்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு வேறு ஒரு படகுக்கு மாற்றப்பட்டனர். இந்திய கடலோர பாதுகாப்பு படையும், கடற்படையும் இணைந்து 11 படகுகள் உதவியோடு மீட்புப்பணியில் ஈடுபட்டன. கடலோர பாதுகாப்பு போலீஸாருக்கு சொந்தமான நான்கு படகுகளும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அதோடு கடற்படைக்கு சொந்தமான 4 ஹெலிகாப்டர்களும் தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
மேலும் ஜவஹர்லால் நேரு துறைமுக ஊழியர்கள், உள்ளூர் மீனவர்களும் பயணிகளை மீட்க உதவி செய்தனர். இதில் 101 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கடலோர பாதுகாப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், கடற்படை கொடுத்துள்ள தகவலின் படி 13 பேர் உயிரிழந்துள்ளனர். பயணிகள் படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்ற விபரம் சரியாக கிடைக்கவில்லை. விபத்து குறித்து கடற்படையும், போலீஸாரும் விசாரணை நடத்துவார்கள். படகு விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கடற்படை படகில் சமீபத்தில்தான் எஞ்சின் மாற்றப்பட்டது. அதனை சோதித்து பார்த்தபோதுதான் இந்த விபத்து நடந்துள்ளது. கடற்படை படகில் இரண்டு கடற்படை அதிகாரி உட்பட 6 பேர் பயணம் செய்தனர். படகு விபத்து குறித்து ஜனாதிபதி முர்மு அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சரவன் குமார் இது குறித்து கூறுகையில், ''நாங்கள் கடலில் சென்று கொண்டிருந்தபோது விரைவு படகு ஒன்று எங்களது படகை இரண்டு மூன்று முறை சுற்றி வந்தது. நான் அதனை வீடியோ எடுத்தேன். திடீரென அந்த படகு எங்களது படகு மீது மோதிக்கொண்டது. இதனால் படகு கவிழ்ந்து அனைவரும் கடலில் விழுந்து உயிருக்கு போராடினர். சுற்றுலா பயணிகள் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அவர்களில் ஒருவரை ஒருவர் உதவிக்கு பிடித்துக்கொண்டவர்கள் கடலில் மூழ்கிவிட்டனர். நான் சிறிய உயிர்காக்கும் ஜாக்கெட்டை பிடித்துக்கொண்டு கடலில் 30 நிமிடம் மிதந்து கொண்டிருந்தேன். அனைத்து நம்பிக்கையையும் இழந்திருந்த நேரத்தில் கடற்படை படகு வந்து எங்களை மீட்டது''என்றார்.