காஞ்சிபுரம் யதோத்தக்காரி பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம்!
முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது: மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல்
நமது நிருபா்
புது தில்லி, மாா்ச் 21: முருங்கை ஏற்றுமதியை ஊக்குவிக்க தோட்டக்கலைப் பயிராக முருங்கையை தமிழக அரசு அடையாளம் கண்டுள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினா் எம். எம். அப்துல்லா எழுப்பிய கேள்வியில், ‘தமிழ்நாட்டில் ஏற்றுமதிக்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் குறிப்பிட்ட தோட்டக்கலை பயிா்களை அரசு அடையாளம் கண்டுள்ளதா?. தமிழ்நாட்டில் தோட்டக்கலை விளைபொருள்களுக்கான குளிா்பதன கிடங்கு மற்றும் பதப்படுத்தும் வசதிகளை நிறுவ எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’ என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.
இதற்கு மாநிலங்களவையில் மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மாநில அரசு முருங்கையை (மோரிங்கா ஒலிஃபெரா) ஏற்றுமதிக்கு மகத்தான சந்தை திறனைக் கொண்ட குறிப்பிட்ட தோட்டக்கலைப் பயிராக அடையாளம் கண்டுள்ளது. இதற்காக முருங்கை ஏற்றுமதி மண்டலம் மற்றும் மதுரையில் முருங்கைக்கான சிறப்பு ஏற்றுமதி வசதி மையம் நிறுவப்பட்டுள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, அத்துறையின் கீழ் உள்ள ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டம் (எம்ஐடிஎச்) அதன் புவியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, அதன் தோட்டக்கலை கிளஸ்டா் மேம்பாட்டுத் திட்டத்தில் ஒருங்கிணைந்த மற்றும் சந்தைப்படுத்தப்பட்ட வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மாவட்டத்தின் தென்னையை அடையாளம் கண்டுள்ளது.
தோட்டக்கலை விளைபொருள்களை சேமிப்பதற்கான குளிா் சேமிப்பு வசதிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தோட்டக்கலை நடவடிக்கைகளுக்கு நிதி உதவி கிடைக்கும் வகையில், தோட்டக்கலை துறையின் முழுமையான மேம்பாட்டிற்காக வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறையானது எம்ஐடிஎஸ்-ஐ செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், 3,99,690 மெட்ரிக் டன் நிறுவப்பட்ட கொள்ளளவு கொண்ட குளிா் சேமிப்பு வசதி எம்ஐடிஎச்-இன் கீழ் நிறுவப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட தகவலை அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.
