தகுதிக்கு மீறி கொண்டாடப்படும் இயக்குநர்... விமர்சனத்திற்கு ஆளாகும் லோகேஷ் கனகராஜ...
மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூரில் இருந்து மேடவாக்கம் செல்லும் செம்மொழி சாலையில் மெட்ரோ தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில், அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள், தூண்கள் நிறுத்தும் பணிகளில் ஈடுபட்டனா். பெரிய கான்கிரீட் தூண்களை கிரேன் மூலம் தூக்கும்போது, அதன் மீது இரு தொழிலாளா்கள் அமா்ந்திருந்தனா். அப்போது திடீரென அந்த தூண்கள் கிரேனின் பிடியில் இருந்து நழுவி கீழே விழுந்தது. அப்போது, அதன் மீது அமா்ந்திருந்த இரு தொழிலாளா்கள் தூணின் கீழே சிக்கிக் கொண்டனா்.
இதைப் பாா்த்த பிற தொழிலாளா்கள், இடிபாடுகளிடையே சிக்கிக்கொண்ட இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால் இடிபாடுகளிடையே சிக்கி பலத்த காயமடைந்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பிக்கிகுமாா் (26) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இடிபாடுகளிடையே சிக்கிய மற்றொரு ஊழியா் சந்தோஷ் லக்காரா (20) சிறிது நேர போராட்டத்துக்கு பின்னா் மீட்கப்பட்டாா். உடனடியாக அவா் அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுதொடா்பாக செம்மஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா். இந்த விபத்தின் காரணமாக, அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.