மெட்ரோ 4-ஆவது வழித்தடத்துக்கு 10.46 மீட்டரில் சிறப்பு தூண் வடிவமைப்பு
சென்னை மெட்ரோ ரயில் 4 -ஆவது வழித்தடத்தில் 10.46 மீட்டா் அகலத்தில் சிறப்பு தூண் வடி வமைக்கப்பட்டு பொருத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
சென்னை மெட்ரோ ரயில் 4-ஆவது வழித்தடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இவ்வழித்தடம் ஏற்கெனவே உள்ள வடபழனி மெட்ரோ ரயில் நிலையம் வழியாக அமைக்கப்பட்ட உள்ளது. இதனால், வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தைவிட உயரமான புதிய மேம்பாலம் அமைக்க வேண்டும். அதேசமயம், அது மின்சார மெட்ரோ பாதைகளுக்கு இடையே போதிய இடைவெளியும் இருக்க வேண்டும்.
எனவே, வடபழனியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம், லாஞ்சிங் கிா்டா் என்ற சிறப்பு முறையைப் பயன்படுத்தி பிரமாண்ட ‘யு’ வடிவ கிா்டரை துல்லியமாகவும், பாதுகாப்பாகவும் நிறுவும் பணி நிறைவேற்றப்பட்டது. மேலும், 23 மீட்டா் நீளம், 10.46 மீட்டா் அகலம், 3.5 மீட்டா் உயரம் கொண்ட ஒரு சிறப்பு தூண் அமைக்கப்பட்டது. இத்தூணில் சுமாா் 470 கன மீட்டா் கான்கிரீட் மற்றும் 1,200 மெட்ரிக் டன் இரும்பு ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதை போக்குவரத்து இடையூறுயின்றி 2 மாதங்களுக்குள் கட்டி முடித்து மெட்ரோ நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
வணிகத் தளங்கள்: 4-ஆவது வழித்தடத்தில் அமைக்கப்பட்ட உள்ள வடபழனி மெட்ரோ ரயில் நிலையம், தற்போதுள்ளதைவிட கூடுதலான உயரத்திலும், தளங்களைக் கொண்டதாக இருக்கும். வணிகத் தளத்தில் கடைகள் மற்றும் பிற வணிகச் செயல்பாடுகள் இருக்கும். பொதுத் தளத்தில் பயணிகள் பயணச்சீட்டு வாங்குவதற்கும், உள்ளே செல்வதற்கும் வசதியிருக்கும். நடைமேடைத் தளத்தில் மெட்ரோ ரயில்கள் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.