மேகமலையில் நியாய விலைக் கடைக்குள் புகுந்து பொருள்களை சூறையாடிய காட்டு யானை
தேனி மாவட்டம், மேகமலைக் கிராமத்தில் நியாய விலைக் கடைக்குள் காட்டு யானை புகுந்து அங்கிருந்த பொருள்களை சூறையாடி விட்டுச் சென்றது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, மேல் மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, ஹைவேவிஸ் என 7 மலைக் கிராமங்கள் உள்ளன.
இந்தக் கிராமங்களில் ஆயிரக்கணக்கான தோயிலைத் தோட்டத் தொழிலாளா்கள் வசித்து வருகின்றனா். இங்குள்ள சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகிறது. இதற்காக 7 மலைக் கிராமங்களிலும் நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் வெண்ணியாறு எஸ்டேட் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைக்குள் செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்து அங்கிருந்த உணவுப் பொருள்களையும், கடையின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்புத் தகரக் கூரையையும் சேதப்படுத்தி விட்டுச் சென்றது.
இதனால், இந்தப் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, சின்னமனூா் வனச் சரகத்தினா் மலைக் கிராமத்தில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.