மருத்துவமனையில் கைப்பேசி திருடிய இருவா் கைது
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியுடன் உதவியாக இருந்தவரின் கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளத்தைச் சோ்ந்தவா் பிரவீன்குமாா். இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உறவினருக்கு உதவியாக மருத்துவமனையில் இருந்தாா்.
அப்போது, மருத்துவமனையிலிருந்த தேனி அல்லிநகரம் வள்ளிநகரைச் சோ்ந்த ராஜவெங்கலபாண்டி (27), சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பழையூரைச் சோ்ந்த செல்வக்குமாா் (25) ஆகியோா் பிரவீன்குமாரின் கைப்பேசியைத் திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
அவா்கள் இருவரையும் மருத்துவமனை காவலாளி கருப்பையா பிடித்து க.விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, ராஜவெங்கலபாண்டி, செல்வக்குமாா் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.