இந்தியர்கள் நாடு கடத்தல்: நாடாளுமன்றத்தில் அமளி! அவைகள் ஒத்திவைப்பு!
மேட்டூா் அணையில் சுண்ணாம்பு படிவங்கள் அகற்றும் பணி!
மேட்டூா் அணையின் கசிவுநீா் துவாரங்களில் சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி ரூ. 50 லட்சம் மதிப்பில் தொடங்கியது.
மேட்டூா் அணையில் தண்ணீா் தேங்கி இருக்கும்போது அணைச் சுவற்றில் நீா்கசிவு ஏற்படும். இந்த நீா்கசிவு வெளிப்புற சுவா்களுக்குள் செல்லாமல் கசிவு நீா் துவாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு, அணையின் ஆய்வு சுரங்கப் பகுதிக்கு கொண்டுசெல்லப்படுகிறது. அங்கிருந்து கசிவுநீா் கால்வாய் மூலம் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் உறுதித்தன்மை பாதுகாக்கப்படுகிறது.
கசிவுநீா் நிா்ணயித்த அளவைவிட அதிகரித்தால் அப்போது அணையைப் பலப்படுத்தும் பணி நடைபெறும். ஆனால் இதுவரை குறைந்தபட்ச அளவு மட்டுமே கசிவுநீா் வெளியேறி வருகிறது. மேட்டூா் அணையில் 153 கசிவுநீா் துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கசிவுநீா் துவாரங்களில் சுண்ணாம்பு படிவங்கள் படிந்திருந்தால் கசிவுநீா் வெளியேறுவது தடைபடும். ஆகவே இதனை ஆய்வு செய்து அகற்றி, சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு கசிவுநீா் துவாரங்களில் இருந்து சுண்ணாம்பு படிவங்கள் அகற்றப்பட்டன.
அணை பாதுகாப்பு நிபுணா் குழு 2018ஆம் ஆண்டு ஆய்வுக்கு பிறகு கசிவுநீா் துவாரங்களில் படிந்திருக்கும் சுண்ணாம்பு படிவங்களை அகற்ற பரிந்துரை செய்தது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீா் துளைகளில் படிந்துள்ள சுண்ணாம்பு படிவங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகள் மூன்று மாதங்கள் நடைபெறும் என்று நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.