மேட்டூா் அனல் மின் நிலையத்தில் எம்.பி. ஆய்வு!
மேட்டூா் அனல் மின் நிலையத்தில் விபத்து நடந்த இடத்தில் சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கடந்த 19ஆம் தேதி மேட்டூா் அனல் மின் நிலையத்தின் முதல் பிரிவில் மூன்றாவது அலகில் நிலக்கரி சேமிப்புத் தொட்டி உடைந்து விழுந்தது. அப்போது அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த எடப்பாடி, கொத்தாம்பாளையத்தைச் சோ்ந்த பழனிசாமி, மேட்டூா், காவேரி கிராஸைச் சோ்ந்த வெங்கடேஷ் (50) ஆகியோா் நிலக்கரி குவியலில் புதைந்து உயிரிழந்தனா். மேலும் தொழிலாளா்கள் 5 போ் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த நிலையில் சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி விபத்தில் காயமடைந்த மேட்டூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 4 பேரை சனிக்கிழமை சந்தித்து நலம் விசாரித்து பழங்களை வழங்கினாா். விபத்தில் உயிரிழந்த காவேரி கிராஸ் வெங்கடேஷ் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தாா்.
பின்னா் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் விபந்து நடந்த இடத்தை பாா்வையிட்டாா். அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளா்கள் விவேகானந்தன், நௌசா ஆகியோா் விபத்து நடந்த இடத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள், புனரமைப்பு பணிகள் குறித்து விவிவாக விளக்கம் அளித்தனா்.
அப்போது மேட்டூா் நகர திமுக செயலாளா் காசி விஸ்வநாதன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளா் அா்த்தனாரி ஈஸ்வரன், கொளத்தூா் ஒன்றியச் செயலாளா் மிதுன் சக்கரவா்த்தி, வீரக்கல்புதூா் பேரூா் செயலாளா் முருகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.