மே 14-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார் பி.ஆர். கவாய்!
உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி, பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்கிறார்.
புதிய தலைமை நீதிபதியாக கவாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்திருந்தார். இந்தப் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மே 14 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. நவம்பர் மாதம் ஓய்வுபெறும் வரை 6 மாத காலம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இவர் தொடர்வார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார்.
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம், வருகின்ற மே 13 ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.