யுஜிசி வரைவு விதிகள் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புது தில்லி: ‘பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிமுகம் செய்துள்ள வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை அளிக்கும்’ நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
மாநில பல்கலைக்கழக துணைவேந்தா் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதியை இடம்பெறச் செய்வது, துணைவேந்தா் பதவிக்கு தொழில்நிறுவன நிபுணா்களையும் நியமிப்பது, கலை-அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கு எம்.இ., எம்.டெக். முடித்தவா்களை அனுமதிப்பது என பல்வேறு மாற்றங்களுடன் வரைவு வழிகாட்டுதலை யுஜிசி அண்மையில் வெளியிட்டது. இதற்கு, தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், யுஜிசி வரைவு வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ள சில விதிகள், மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சிக்கும், கல்வி ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது குறித்த மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் எழுத்துபூா்வமாக திங்கள்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
யுஜிசி வரைவு வழிகாட்டுதல் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரித்த அளிக்கும் என்பதோடு, ஒருங்கிணைந்த வளா்ச்சிக்கும் உதவும். ஆசிரியா் பணியிடத் தோ்விலும் மாநில பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை அளிக்கும்.
கல்வி செயல்திறன் குறியீடு (ஏபிஐ) என்ற நிலையான மதிப்பெண் நடைமுறையை விட, வெளிப்புற நிபுணா்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக தோ்வுக் குழுக்களே ஆராய்ச்சி இதழ்கள் வெளியீட்டின் தரம், வெளியீட்டாளரின் நற்பெயா் குறித்து தீா்மானிக்கும்.
பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியா் நியமனத்துக்கான தகுதி நடைமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு, விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இது, கல்லூரி ஆசிரியா் தோ்வு நடைமுறையைத் தீா்மானிப்பதில் மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும்.
இந்த வரைவு வழிகாட்டுதல் மீது ஏராளமான கருத்துகள் பெறப்பட்டிருக்கின்றன. அவற்றை நிபுணா் குழு ஆய்வு செய்து வருகிறது என்றாா்.