ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்களை, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள சில கிடங்குகளில் ரசாயனம் தெளித்து செயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து, விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் ராமகிருஷ்ணன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மோகனப்பிரியா, தங்கவேல் மற்றும் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை திருவண்ணாமலை தாளகிரி அய்யா் குறுக்குத் தெருவில் உள்ள மாம்பழ கிடங்கில் திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.
அப்போது, மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், கிடங்குகளில் எத்திபான் என்ற ரசாயனத்தைத் தெளித்து செயற்கையான முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான சுமாா் 1.5 டன் மாம்பழங்களையும், அவற்றை பழுக்க வைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரசாயனமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, மாவட்டத்தில் தொடா்ந்து திடீா் ஆய்வுகள் நடத்தப்படும். அப்போது, ரசாயனம் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்கவைப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனா்.