`ரஜினிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்’ - 50 ஆண்டு திரைப்பயண விழாவுக்குத் தயாரான வேலூர் ரசிகர் மன்றம்
ரஜினிகாந்த்தின் திரைப்பயணம் 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா எடுப்பது தொடர்பாக ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் மன்ற நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சோளிங்கரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில், ரஜினிகாந்த் நடித்த அனைத்து படங்களில் இருந்தும் சிறப்புக் காட்சிகளையும், அடிதூலான பன்ச் டயலாக்குகளையும் எடுத்து தொகுத்து சிறப்புக் காட்சிகளாக வெளியிட்டு அமர்க்களப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, மாவட்டச் செயலாளர் சோளிங்கர் என்.ரவி பேசும்போது, ``உலக அளவில் தமிழ்ச் சினிமாவின் பெருமையை உயர்த்திப் பிடித்திருப்பவர் தலைவர் ரஜினி. தனது ஸ்டைல், நடிப்பு, வசனங்கள் மற்றும் சமூகப் பங்களிப்பின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தையும் பிடித்திருக்கிறார். பல சாதனைகளையும், பல விருதுகளையும் பெற்று அரைநூற்றாண்டு காலமாய் தமிழ் திரையுலகை ஆண்டு கொண்டிருக்கும் அதிசய பிறவி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்.

குதிரை ஓட்டமும், குறையாத மாஸும்தான் தலைவரின் வெற்றிப் பின்னணி. அனைவரும் வியக்கும் எளிமையின் பிரமாண்டம் ரஜினி. ஆன்மிகத்தில் எங்களின் ஆசான் அவர். உண்மையான உழைப்பால் எத்தனை உயரம் வேண்டுமானால் அடையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாய் விளங்கி, ஆன்மிகத்திலும், அறத்திலும் நிஜவாழ்வில் இளைஞர்களை நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகின் வர்த்தகத்தை உயர்த்தி, தமிழகத்தின் அடையாளமாய் விளங்கும் தலைவருக்கு `பாரத ரத்னா விருது’ வழங்க வேண்டும் என்ற அன்பு கோரிக்கையை இங்கு முன்னெடுப்போம்.
நம் அன்புத்தலைவர் சூப்பர் ஸ்டாரின் கலைப்பயணம் 50 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறது. நம்மையும், தமிழக மக்களையும் மகிழ்விக்க 75 வயதிலும் உழைப்பின் உச்சமாகவும், ஜாதி, மத பேதமற்ற ஆன்மிகத்தாலும், தேச பக்தியோடு நம்மை வழி நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தனது கலையால் பெருமைச் சேர்த்தவர்.
மேடைகளில் தற்பெருமை இல்லாமல் நேர்மையான, உண்மையான யதார்த்த பேச்சுகளால் மக்களின் கவனத்தை ஈர்ப்பவர். திரையில் மட்டும் அல்ல... நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்பவர். சினிமா என்பதை கடந்து, சூப்பர் ஸ்டார் ஒரு சக்திமிகுந்த தலைவர். பாரத நாட்டில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும், அதில் நம்பர் ஒன் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். அதற்குக் காரணம் தலைவரின் உண்மையும், நேர்மையும். எனவே, தலைவரின் 50 ஆண்டுகால கலைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக விழா எடுப்பது குறித்து நம் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தலைமைக்குத் தெரிவிக்க இருக்கிறோம்’’ என்றார்.

இதனிடையே, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரசிகர் நற்பணி மன்றத்தின் சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளின் காட்சிகளையும், கஜா புயல் பாதிப்பு உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களைத் தேடிச்சென்று நிவாரணப் பொருள்கள் வழங்கிய சேவைகளையும் ஒளிபரப்பிய மாவட்டச் செயலாளர் ரவி, மன்றத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நிர்வாகிகளின் செயல்பாடுகளையும் ரஜினியிடம் காட்சிப்படுத்தி பெருமைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்து உற்சாகப்படுத்தினார். ரஜினிக்கான பிரமாண்ட பாராட்டு விழாவை வரும் ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு, கூடியிருந்த நிர்வாகிகளிடம் கையெழுத்தும் பெறப்பட்டன. பிரமாண்ட விழா எடுப்பதையொட்டி, அரசுப்பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம், புத்தாடை வழங்குவது, சிறு குறு விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்குவது, மனவளர்ச்சிக் குன்றிய இல்லத்தில் விருந்துக்கு ஏற்பாடு செய்வது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன.