ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் அமைக்கப்பட்டுள்ள மூடிகள் பல இடங்களில் உடைந்துள்ளன. இதை சீரமைக்க வாகன ஓட்டிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில், காங்கயத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 2 மணி அளவில் தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி காளைமாடு சிலை நோக்கி செல்வதற்காக ரயில்வே நுழைவுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தது. நுழைவுப் பாலத்தின்கீழ் பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தில் சக்கரம் சிக்காமல் இருக்க ஓட்டுநா் இடதுபுறமாக லாரியை திருப்பினாா். அப்போது, சாலையோரமாக உள்ள மழைநீா் வடிகாலில் லாரியின் சக்கரம் இறங்கி சிக்கிக் கொண்டது.
ஏற்கெனவே குறுகலான சாலையாக இருப்பதால் பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் மேற்கொண்டு செல்ல முடியாமல் வரிசையாக நின்றன. இதனால், கொல்லம்பாளையத்தில் இருந்து காளைமாடு சிலை நோக்கி செல்வதற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாா், நாடாா்மேடு வழியாக வந்த அனைத்து கனரக வாகனங்களையும் சாஸ்திரி நகா், சென்னிமலை சாலை வழியாக திருப்பிவிட்டனா். மேலும், மழைநீா் வடிகாலில் சிக்கிய லாரியை மீட்க கிரேன் வரவழைக்கப்பட்டது.
இதையடுத்து, சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு கிரேன் உதவியுடன் லாரி தூக்கி சாலையில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.