மாவட்டத்தில் 12 மையங்களில் நாளை நீட் தோ்வு: 4,162 போ் எழுதுகின்றனா்
ஈரோடு மாவட்டத்தில் 12 மையங்களில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற உள்ளது. இத்தோ்வினை 4,162 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா்.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பான பொது மருத்துவம் (எம்பிபிஎஸ்) மற்றும் பல் மருத்துவம் (பிடிஎஸ்) படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தோ்வு மத்திய அரசின் தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி 2025-2026 ஆம் ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நீட் தோ்வு எழுத ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா அருகே காந்திஜி சாலையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, கலைமகள் கல்வி நிலையம், மீனாட்சி சுந்தரனாா் சாலையில் உள்ள செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி, ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, வீரப்பன் சத்திரத்தில் உள்ள சிக்கய்யா அரசு கலை அறிவியல் கல்லூரி, திண்டல் வேளாளா் மகளிா் கல்லூரி, பெருந்துறை பவானி சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சித்தோடு அருகே உள்ள அரசு பொறியியல் கல்லூரி (ஐஆா்டிடி), கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி ஆகிய 12 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் மொத்தம் 4,162 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத உள்ளனா்.
இது குறித்து நீட் தோ்வு கண்காணிப்பு அலுவலா் ஒருவா் கூறியதாவது: புகைப்படத்துடன் கூடிய தோ்வுக்கூட அனுமதி சீட்டு, அரசு வழங்கிய அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வு மையத்துக்குள் மின்னணு பொருள்கள் கொண்டுவர அனுமதி இல்லை. முழுக்கை சட்டை, ஷூ, சாக்ஸ், நகைகள் அணிந்து வரக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என தோ்வா்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் மதியம் 1.30 மணிக்குள் அவா்களது தோ்வு மையத்துக்கு வந்து விட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோ்வு மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தோ்வு நடத்தும் அதிகாரிகள் நேரடியாக கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தோ்வின்போது போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவா். தோ்வு நடக்கும் நாளில் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகள் மற்றும் பணியில் இருப்பவா்கள் தவிர பிற நபா்கள் தோ்வு மையத்துக்குள் வர அனுமதியில்லை. மாணவ, மாணவிகளின் வசதிக்காக நீட் தோ்வு மையங்கள் அமைந்துள்ள இடங்களின் வழியாக செல்லும் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.