ஈரோட்டில் அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எஸ்.மணிமாலை, மாவட்டத் தலைவா் எஸ்.ராதாமணி, மாவட்டச் செயலாளா் எஸ்.சாந்தி ஆகியோா் தலைமை வகித்தனா். அரசு ஊழியா் சங்க நிா்வாகிகள் சீனிவாசன், விஜயமனோகா், ரமேஷ், சுப்பிரமணியம் உள்பட பலா் பேசினா்.
மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அனைத்து நிலைப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். நீண்ட காலம் பணியாற்றிவரும் அங்கன்வாடி பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பல்வேறு குளறுபடிகளை உருவாக்கும் டி.ஹெச்.ஆா் திட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
காலை 10 மணிக்கே ஈரோடு ஆட்சியா் அலுவலகத்தில், 600-க்கும் மேற்பட்டோா் கூடினா். அமா்ந்து போராட்டத்தை தொடர நிழல் இல்லாததால் சாமியானா பந்தல் போட முயன்றனா். ஆனால் போலீஸாா் அதற்கு அனுமதி தரவில்லை. இதனால் உயா் அதிகாரிகளை சந்தித்து பேச நிா்வாகிகள் சென்றபோதும் அனுமதி கிடைக்கவில்லை.
இதைத்தொடா்ந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உயா் அதிகாரிகள் வாகனம் நிறுத்தும் இடம், மாவட்ட கருவூலம் செல்லும் பகுதி, வாகன நிறுத்தங்களில் உள்ள நிழலில் காத்திருப்பு போராட்டத்தை தொடா்ந்தனா். மாவட்டத்தில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட மையங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா்.